பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.
பைந்தமிழர் தன்னம்பிக்கையும் தன்மானமும் பெற்றிடப் பகலிரவாய் பசி உறக்கம் பார்க்காமல் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் கனவுகளை நனவாக்குவதே நமது நோக்கம். அவர் மத மறுமலர்ச்சிக்காக மதச் சீர்திருத்தத்தை மாபெரும் புரட்சிப் போக்கில் நிகழ்த்திட்டார். அதனால் வழிபாட்டுக்கு உரிய கடவுளர் சிலைகளை உடைத்தார். படங்களை அவமானப்படுத்தினார். கடவுளே இல்லையென்று கூறினார். அவர் அந்த அளவுக்குத் தீவிரமாக, வீரமாக மதச் சீர்திருத்தத்தைச் செய்ததால்தான் மதவாதிகள் பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்கவும், பழைய பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் புத்துயிர் கொடுக்கவும் ஆரம்பித்திட்டார்கள்.
அதே நேரத்தில் சிலர் கடவுளைச் சொல்லால் அடித்துப் பூசை செய்யத் திரு அவதாரம் எடுத்திட்ட ‘சொல்லடி நாயனார்’ ஆன பெரியார் ஈ.வெ.ரா.வின் போக்குகளைத் தவறாகப் புரிந்து கொண்டனர். அதனால் அவர்கள் மதமறுப்பையும், கடவுள் வெறுப்பையும், கோவில் எதிர்ப்பையும், நாத்திகத் தத்துவ நாட்டத்தையும் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் பெரியார் ‘தமிழில்தான் அருட்சினை செய்ய வேண்டும்’; ‘தமிழர்கள் அருச்சகர்களாக வேண்டும்’; ‘எல்லோரும் கருவறைக்குள் புகுந்து கடவுளை வழிபட உரிமை வேண்டும்’; ‘கோவிலில் ஒழுக்கக் கேடுகளும் முறைகேடுகளும் நடக்காமல் காக்க வேண்டும்’..... என்று மதச் சீர்திருத்தத்தில் உயரிய உயிர்நாடியான கருத்துக்களைக் கூறியுள்ளதைச் சிந்திக்க வேண்டும். மதத்தின் பெயராலேயே புகழும், செல்வமும், செல்வாக்கும் பெற்று நாட்டைச் சுற்றிவரும் மடாதிபதிகள், குருக்கள்கள், பூசாறிகள், மதச் சொற்பொழிவாளர்கள்.... எனப்படுபவர்களில் எவருமே மேலே குறிப்பிட்ட சீர்திருத்தக் கருத்துக்களை வெளியிடுவதற்குத் தரமோ! திறமோ! உரமோ! வீரமோ! தீரமோ! பெற்றிருக்க வில்லை, இந்நாட்டில்.
எனவேதான், தமிழினத்தின் தலைவர் மாபெரும் சமுதாயச் சீர்திருத்த வாதி, சிந்தனைச் சிற்பி, சிறைக்கஞ்சாச் சிங்கம், தன்னிகரில்லாத் தலைவர், வெண்தாடி வேந்தர், தன்மான இயக்கத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களை அறுபத்து நான்காவது நாயனாராகச் ‘சொல்லடி நாயனார்’ என்று அழைத்துப் பெருமைப் படுகிறோம் நாம். இது அவர் ஆற்றியுள்ள மலை போன்ற தொண்டுகளின் முன்னே சிறு கடுகு போன்றதாகும். அதாவது, தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும், தன்னுடைய கடைசி மூச்சு உள்ள வரை தமிழினத்தின் உரிமையையும், மரியாதையையும், பெருமையையும் பாதுகாத்துக் கொடுத்திட்ட மாபெரும் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு நன்றி சொல்லியேயாக வேண்டும்.
அவர் “தமிழில் மதத்தைப் பற்றி ஒன்றுமே யில்லை; எல்லாம் ஆரியர்களின் சமசுக்கிருதத்திலேதான் இருக்கிறது” -- என்று கூறியதால்தான்; - ‘தமிழில் இறைவன், கடவுள், ஆண்டவர், பட்டவன், ஆச்சாரியன், தலைவன், தெய்வம், தேவர், தேவாதிதேவியர், வானவர், விண்ணவர், அமரர், இருடி, முனிவர், கந்தர்வர், கணங்கள்.... என்று நாற்பத்தெட்டு வகையினர் வழிபாட்டுக்கு உரியவர்களாகத் தமிழ்மொழியின் மதத் துறையில் குறிக்கப் படுகின்றனர்’;
‘தமிழ்மொழியில் வழிபாடு செய்யப்படும் இடம் கோவில், ஆலயம், திருப்பதி, பீடம், இருக்கை, அமளிகை, திருவடி.... என்று தொண்ணூற்றாறு வகையாகக் குறிக்கப் படுகின்றது’; ‘தமிழில் நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள் என்று அருட்செல்வங்கள் பதினாறு குறிக்கப் படுகின்றன.’; ‘அசுரவேதம் (யசுர் வேதம்), சாம வேதம் (ஜாம வேதம்), அதர்வான வேதம் (அதர்வண வேதம்), இருடி வேதம் (ரிக் வேதம்) என்று தமிழில் நான்கு வேதங்கள் குறிக்கப் படுகின்றன’;
‘தமிழில் 1.குருவாக்குகள், 2.குருவாசகங்கள், 3.கருவாக்குகள், 4.கருவாசகங்கள் 5.திருவாக்குகள், 6.திருவாசகங்கள், 7.அருள்வாக்குகள், 8.அருள்வாசகங்கள், 9.மருள்வாக்குகள், 10.மருள்வாசகங்கள், 11.சூத்திறங்கள், 12.சூத்திரங்கள், 13.சூத்தரங்கள், 14.சாத்திறங்கள், 15.சாத்திரங்கள், 16.சாத்தரங்கள், 17.தோத்திறங்கள், 18.தோத்திரங்கள், 19.தோத்தரங்கள், 20.தந்திறங்கள், 21.தந்திரங்கள், 22.தந்தரங்கள், 23.தாந்தரங்கள், 24.தாந்தரீகங்கள், 25.எந்திரங்கள், 26.எந்திறங்கள், 27.எந்தரங்கள், 28.ஏந்தரங்கள், 29.ஏந்தரீகங்கள், 30.மந்திறங்கள், 31.மந்திரங்கள், 32.மந்தரங்கள், 33.மாந்தரங்கள், 34.மாந்தரீகங்கள், 35.பூசாவிதிகள், 36.பூசை மரபுகள்.... என்று முப்பத்தாறு வகை சமய நூல்கள் குறிக்கப் படுகின்றன.
'தமிழில் உள்ள மதக் கருத்துக்களில்தான் அறுபத்து நான்கு ஆயகலைகள், நாற்பத்தெட்டு அருட்கலைகள், ஒன்பது கட்வுட்கலைகள், ஒன்பது தெய்வீகக் கலைகள், ஒன்பது பேய்க் கலைகள், ஒன்பது நோய்க் கலைகள், ஒன்பது தேய் கலைகள்.... என்று விரல்விட்டு எண்ணிக் காட்டும் அளவிற்குப் பல சமயக் கலைகள் இருக்கின்றன’;
‘தமிழ்மொழியில்தான் இறையருளைப் பெற்ற திருவருட் செல்வர்கள் எண்ணற்ற வகை சித்தர்கள், பத்தர்கள், பத்தியார்கள், போத்தர்கள், போத்தியார்கள், புத்தர்கள், புத்தியார்கள், முத்தர்கள், முத்தியார்கள், சீவன்முத்தர்கள், சீவன் முத்தியார்கள், உருவசித்தியார்கள், அருவ சித்தியார்கள், அருவுருவ சித்தியார்கள்.... என்று பல வகையினராகப் பட்டியலிட்டுக் காட்டப் படுகின்றனர்’.....
என்ற பேருண்மைகளெல்லாம் வெளிப்பட்டிட்டன. அதாவது, பெரியாரவர்கள் மதத்தை எதிர்த்துப் போரிட்டதால்தான் பரம்பரை பரம்பரையாக இரகசியங்களாகப் பாதுகாக்கப் பட்ட பேருண்மைகளில் பல மேலே குறிப்பிட்டது போல் அனைவர்க்கும் அறிவிக்கப் பட்டன.
எனவேதான், தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஒரு நாத்திகப் பெரியாரல்ல. அவர் ஓர் ஆத்திகப் பெரியாரே! என்ற கருத்தை வலியுறுத்துகிறது, இந்து மறுமலர்ச்சி இயக்கம். அதாவது பெரியாரால்தான் இந்துமதம் புதிய வலிவையும், பொலிவையும், வளத்தையும், வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை! உண்மை! உண்மை!
எனவே, தந்தை பெரியார் தோன்றியிருக்கா விட்டால் மாபெரும் இந்துமத விழிச்சியோ! எழுச்சியோ! செழுச்சியோ! ஏற்பட்டிருக்கவே முடியாது! முடியாது! முடியாது!. எனவே, இப்போது அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ்ச் சுற்றுப் பயணம் செய்யும் நமது அடியான்கள், அடியாள்கள், அடியார்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், பற்றாளர்கள், விருப்பாளர்கள்.... முதலியோரனைவரும் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் படத்தைப் பூசைக்குரியதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பத்தர்களுக்குப் பெரியார் ஈ.வெ.ரா.வின் படத்தையே மந்திரித்துப் பூசை செய்து தர வேண்டும். எங்கெங்கு பெரியார் ஈ.வெ.ரா.வின் சிலைகளிருக்கின்றனவோ, அங்கங்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், மற்றப் புனிதமான திருவிழா நாட்களிலும் பூசைகள் செய்யப்பட வேண்டும். அதாவது, பெரியார் ஈ.வெ.ரா.வைக் கண்கண்ட தெய்வமாக வழிபட்டால்தான் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு, இந்துமதம், இந்தியப் பண்பாடு, இந்திய நாகரீகம், இந்தியர்கள், இந்தியா எனப்படும் அனைத்தும் பாதுகாக்கப் படும்.
".... அதனாலே, தோழர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! முதலில் பார்ப்பானை ஒழிக்கணும். சாத்திரம் சம்பிரதாயம் சடங்கு அது இதுன்னு தமிழன் தன் பணத்தைப் பாழாக்கிப் பார்ப்பான் காலிலே விழுவதைத் தடுக்கணும். தமிழனுக்குத் தன்மான உணர்வு, சுய மரியாதை உணர்வு .... எல்லாம் ஏற்பட்ட பிறகுதான் தனிநாடு கிடைக்கணும். அதுவரை எனக்கு அரசியலைப் பற்றிக் கவலையில்லை. யாரு மந்திரியா வந்தாலும் எனக்கு அக்கரையில்லை. தமிழன் தன் இனத்தை மதிக்கணும்...” - என்று இப்படித் தெளிவாகப் பேசினார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள்.