பெரியாருக்குப் பின் பகுத்தறிவுப் பணியின் நிலை என்ன? - பகுதி - 1
சித்தர்
28-2-75
பெறுநர்:
பெருமதிப்பிற்குரிய,
இனிய நண்பர் உயர்திரு ச. வெண்மணி அழகன் அவர்கள்
ஆசிரியர்,
பகுத்தறிவாளர் கழகம்
உயர்திரு ஐயா,
தங்களின் 26-2-75ஆம் நாளைய பேரார்வம் மிக்க அஞ்சல் இன்று காலை 28-2-75 கிடைக்கப் பெற்றேன். தங்களின் ஆர்வத்தை வீணாக்கி விடக் கூடாது என்பதால், பல்வேறு அலுவல்களுக்கு இடையில் உடன் அஞ்சல் விடுக்கின்றேன்.
நண்ப, தங்களுக்குப் பெற்றோர், உடன் பிறந்தார், குடும்பத்தார் இருப்பின் அனைவர்க்கும் என் அன்பைக் கூறுங்கள். நமது பகுத்தறிவாளர் இயக்க உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் என் அன்பைக் கூறுங்கள். நமக்குள், அஞ்சல் மூலம் கருத்துப் பரிமாறிக் கொள்வோம். பிறகு, வாய்ப்பு ஏற்படும் போது நேரில் சந்திப்போம். நமது நட்பு வளரட்டும். அது, நம் மொழி, இனம், நாடு ஆகிய மூன்றும் தூய்மை பெற, உயர்வு பெற, உய்வு பெற உலகளந்த புகழ் பெறப் பாடுபடும் வண்ணம் அமையட்டும்.
‘ஒரு கருத்து அல்லது செய்தி (a thought or idea and an information) நம் நாட்டில் படித்தவர்களால் கூட உண்மை வடிவில் பரப்பப் படுவதில்லை. இன்றைய செய்தித் தாள்களும், தங்கள் தங்களுடைய கருத்தை இணைத்தே செய்திகளை (News with the views of the papers) வெளியிடுகின்றன. அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள், “இந்தப் பத்திரிகைக் காரன்களை நான் நம்பறதில்லீங்க” என்று அடிக்கடி கூறிட்டார். எனவேதான், தனது தள்ளாத வயதிலும், தந்தை பெரியார் அவர்கள் கடும் வெயிலிலும், கொடும் பனியிலும் இரவுபகலாக நாடு முழுதும் சுற்றிப் பகுத்தறிவுப் பணி செய்திட்டார். அவர், நம் மக்களின் அறியாமையும், அவசரமும், கற்பனையும், கதை சுவைக்கும் பண்பும் தன் பணியை வீணாக்கி விடக் கூடாது என்பதற்காகத்தான் அரும்பாடுபட்டார்.
அரசியல் வரலாற்றுப் படி, ‘ஜின்னா’, தனிநாடு, ‘பாகிசுத்தான்’ (Pakistan) கேட்கும் முன்னரே தந்தை பெரியார் திராவிட நாடு கேட்டார். ஆனால், ஏன் அவர்; தனி நாட்டுப் போராட்டத்துக்காக எண்ணற்றோர் இரத்தக் கையெழுத்துப் போட்டு படை வீரர்களாகச் சேர்ந்தும், ‘திராவிட நாட்டுக் கோரிக்கை’யைக் கைவிட்டார்?
அவர், “இந்தப் பசங்க, இன்னும் பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணீர் குடிக்கிறானுங்க. இவனுங்க தனி நாடு அடைஞ்சாப் பழைய ராசாக்கள் மாதிரிப் பார்ப்பானுக்கு அடிமையாயிருக்கிறவனும், பயந்து சாகிறவனும்தான் நாடாளுவானுங்க. அப்புறம் பார்ப்பான் எதுக்கெடுத்தாலும், ‘வேதத்தில் சொல்லியிருக்கு, மனுஸ்மிருதிகளில் சொல்லியிருக்கு’ன்னு எல்லாரையும் ஏமாத்திப் பணம் பறிச்சுப் பிழைப்பான். தமிழன், நாலாஞ்சாதியாய், சூத்திரனாய், தேவடியா மகனாய்த்தான் இருக்கணும், அதனாலே, தோழர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! முதலில் பார்ப்பானை ஒழிக்கணும். சாத்திரம் சம்பிரதாயம் சடங்கு அது இதுன்னு தமிழன் தன் பணத்தைப் பாழாக்கிப் பார்ப்பான் காலிலே விழுவதைத் தடுக்கணும். தமிழனுக்குத் தன்மான உணர்வு, சுய மரியாதை உணர்வு .... எல்லாம் ஏற்பட்ட பிறகுதான் தனிநாடு கிடைக்கணும். அதுவரை எனக்கு அரசியலைப் பற்றிக் கவலையில்லை. யாரு மந்திரியா வந்தாலும் எனக்கு அக்கரையில்லை. தமிழன் தன் இனத்தை மதிக்கணும்” - என்று இப்படித் தெளிவாகப் பேசினார்.
“கடவுள் இருக்கோ இல்லையோ, எனக்குக் கவலையில்லை. பார்ப்பான் மட்டும் ஏன் பூசாரியாக இருக்கணும்? சமசுக்கிருதத்தில் மட்டும் ஏன் மந்திரம் சொல்லணும்? தமிழன் ஏன் சாமிக்குப் பக்கத்திலே கருவறை வரை போகக் கூடாது? ......” என்று சமயச் சீர்திருத்தம் பேசிய வெண்தாடி வேந்தர் சிந்தனைச் சிற்பி, சிறைக்கஞ்சாச் சிங்கம், பகுத்தறிவுப் பகலவன், சீர்திருத்தச் செம்மல், தமிழினத் தலைவர், தந்தைப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், தனது முதுமையை உணர்ந்தார்.
உடனே, அவர், “உலக்கைக்குப் பூண் செதுக்க ஆரம்பித்தால்தான், அது உளிக்காவது ஆகுங்க. அவனவன் கத்தி வச்சுக்க, தீப்பந்தம் வச்சுக்க. பெட்ரோல் வச்சுக்க. நான் சொல்லுவேன், பார்ப்பான் குடுமியை வெட்டு, பூணூலை அறு, அக்கிரகாரத்தில் பெட்ரோலை ஊற்றி நெருப்பை வைத்திடு ..... அப்போதுதான் பார்ப்பான் கீழே இறங்கி வருவான். மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடாது ....” என்று பேச ஆரம்பித்தார்.
மாவீரர் பெரியார் அவர்கள், இப்படி யெல்லாம் தன்னலமற்றுப் பகுத்தறிவுப் பணி புரிந்தும் தமிழர் விழிக்க வில்லை. விழித்து எழாதவர்களைத் தட்டியெழுப்ப நினைத்தார், வைக்கம் வீரர் தந்தை பெரியார். உடனே,
“கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்”
கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி
அதைப் பரப்புகிறவன் அயோத்தியன்
கடவுள் இல்லை! இல்லை!! இல்லை!!! இல்லவே இல்லை!”
என்ற கொள்கை முழக்கத்தை வெளியிட்டார்.
எனதருமை நண்பா! உன் போன்ற ஆர்வம் உடையவர் ஒருவர் இருவராவது தந்தை பெரியாரிடம் நேரடித் தொடர்பு கொண்டிருந்தால் ஏதேனும் பயன் விளைந்திருக்கும். அப்படிப் பயன் விளையவே இல்லாமல் செய்தது தமிழரின் பண்பான ‘அடக்கம்’, ‘பொறுமை’, ‘விட்டுக் கொடுத்தல்’, ‘ஏற்றல்’, ‘காத்திருத்தல்’ .... முதலியவைதான். இலைமறை காயாகவே தங்களைப் போல் பலர் இருந்து விட்டனரே!...?
நண்பா! படித்தவர்கள், இன்னும் ஐம்பது விழுக்காடு (50%) கூட ஏற்படாத இந்தத் திருநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய பணி, சாதித்துள்ள சாதனை, ஈடு இணையற்றது, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று.
பார்ப்பான் அக்கிரகாரத்தில் தமிழன் மேல் துண்டும் செருப்பும் போட்டு நடக்க முடியாது, நடக்கக் கூடாது என்ற பார்ப்பனியச் சட்டம் இருந்தது. அந்தத் தமிழகத்தை, இன்று தமிழனே, “எங்கும் தமிழர்! எதிலும் தமிழ்!! எல்லாம் தமிழ்!!!” என்று செங்கோல் ஓச்சும் நிலைக்கு உரியதாக ஆக்கிய பெருமை தந்தை பெரியாருக்கே உரியது. கடைசித் தமிழன் உயிரோடு உள்ள வரை தந்தை பெரியாரின் புகழ் வாழும், வளரும்.
நண்பா! தந்தை பெரியார் மட்டும் தோன்றியிருக்கா விட்டால்; பார்ப்பனன் ‘ஒவ்வொரு தமிழனும் அவனுடைய நெற்றியில் தன்னுடைய சாதிப் பெயரைப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்றே சொல்லியிருப்பான். இவ்வளவு செயற்கரிய செய்த பெரியாரின் தொண்டினை, கருத்தை, கொள்கையை, சாதனையை ... இன்னும் படிப்பறிவில்லாததால் உணராமலிருக்கும் தமிழனிடம் எனது ஆய்வுக் கருத்துக்கள் கூறப்பட்டால்; அது தவறான, பயனற்ற, முரண்பாடான, வேறான, விரும்பத் தகாத பயன்களை நல்கிடும் என்றுதான் நான் கூறி வருகிறேன்.
நான் ‘மந்திரங்களை அப்படியே நம்ப வேண்டும்’ என்று கூறவில்லை. Sound Waves ஒலி அலைகள், Vibration ஒலி அதிர்வுகள், Musical Notes இசை இயல்பு ஒலிகள் .... முதலியவை healing the wound புண்ணைக் குணப்படுத்தல் Nervous Disability நரம்புத் தளர்ச்சி, Mental Disorders மூளைக் குழப்பம் .... முதலியவைகளை நலப் படுத்தல், depression தாழ்வு உணர்ச்சி, ...... and frustration சலிப்புணர்வு, வெறுப்புணர்வு, cowardist கோழை நிலை .... முதலிய இன்னோரன்ன பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அவைதான், கோயில்களில் திருவாசகம், தேவாரம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ், அருட்பா .... முதலியவற்றின் ஒலிகளாகவும், நாயனம், மத்தளம், ஒத்து, தாளம், கோடாங்கி, உடுக்கை, பம்பை, கொம்பு, தாரை, தப்பட்டை .... முதலியவைகளாகவும் பயன்பட்டன என்றும்;
சங்க காலத்தில் வீரர்களுக்கு நடுகல் (Tomb Stone) நடப்பட்டு ஏற்பட்ட வீர வழிபாடு (Hero Worship)தான், பத்தினி வழிபாடுதான் (Sakthi Cult) நமது சமய வழிபாடுகளாக வளர்ந்தன. மன்னர்கள், வீரர்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பத்தினி பெண்டிர்கள்.... புதையுண்ட இடமே கோயில். அதாவது, முன்னோர் வழிபாடே (Ancestors Worship) நமது சமயம். இன்று பெரியாருக்கு விழாக் கொண்டாடுவது போல் இத் திருநாட்டைப் புகழ் மணக்கச் செய்து கருத்தாலும், செயலாலும் ஆண்டு சென்ற ‘ஆண்டவர்கள்’ (one who ruled) பெயரால் அவர்களுக்கு விழாக் கொண்டாடுவதுதான் திருவிழா. ‘கோயிலில் இருக்கும் கற்சிலைகளுக்கு மாலை போடுவதும், சுண்டல் படைத்துச் சிறுவர்களுக்கு வழங்குவதும் தவறு என்றால்; தந்தை பெரியார் படத்துக்கு மாலை போடுவதும், படத்தை ஊர்வலமாகத் தூக்கி வருவதும், பெரியார் பிறந்த நாளில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவதும் தவறுதான்’ - என்றுமே கூறி வருகிறேன். இது பகுத்தறிவில்லையா?
நண்பரே! தந்தை பெரியாரே சித்தர்களின் பாடல்களிலிருந்துதான் நாத்திக வாதத்தைக் கடன் வாங்கினார். சுவாமி கைவல்யத்தின் தயாரிப்புத்தான் தந்தை பெரியார். தந்தை பெரியாரை முழுக்க முழுக்க ஒத்துக் கொள்ள முடியாத நிலையில்தான் குத்தூசி சா.குருசாமி வெளியேறிப் பகுத்தறிவுக் கழகம் அமைத்தார்.
குத்தூசியார் நடத்திய ‘குத்தூசி’ என்ற மாத இதழில் அவரே என்னை ‘மத ஆய்வாளர் ப.கி. ப.கிருட்டிணமூர்த்தி’ என்று அறிமுகம் செய்து மூன்று கட்டுரைகளுக்கு மேல் வெளியிட்டுள்ளார். சித்தர்களை விடச் சிறந்த பகுத்தறிவு வாதிகள் உலகில் தோன்றியதில்லை. தோன்றவும் முடியாது, முடியவே முடியாது.
நான் மந்திரவாதி இல்லை. மதவாதி அல்ல. மிதவாதி அல்ல. ஒரு நூறு நூல்களுக்கு மேல் எழுதி வைத்திருப்பவன். குத்தூசி போன்ற உண்மைப் பகுத்தறிவாளர்களுக்கு வாரிசாக இருப்பவன்.
‘எதையும் கண்ணை மூடிக் கொண்டு மறுப்பதும் தவறு, நம்புவதும் தவறு; முறையாக ஆராய்ந்து கூறுவதே நன்று’ என்ற கொள்கை உடையவன். ‘மதம் என்பது வெறும் மாயங்களால், மந்திர தந்திரங்களால், தேர்த் திருவிழாக்களால் ஆகியது’ என்று எண்ணும் பகுத்தறிவு தவறான பகுத்தறிவு.
‘ஓர் இனத்தின் உண்மையான வரலாறே மதம்’ என்பதே என் கருத்து. நண்பரே! இன்னும் சொல்லப் போனால்,
‘மனித குலத்தின் வரலாற்றைக் கூறுவதுதான் மதம்’
‘கோவில் என்பது அண்டத்தை விளக்கும் பொருட்காட்சி சாலை’
‘ஆரம்பக் காலத்தில் குறிப்பிட்ட மதம் குறிப்பிட்ட இன நாகரிகத்தை அக்காலக் கட்டத்தில் விளக்கும் கலைக் களஞ்சியம்’
என்ற அடிப்படைக் கருத்துக்களையே எனது நூல்கள் விளக்குகின்றன.
நண்பா! மந்திர மாயங்களை நான் விரும்பவில்லை, வற்புறுத்த வில்லை; ஆனால், அவையெல்லாம் என்ன? என்று ஆராய்ந்து வரும் பகுத்தறிவு வாதியே நான். அறிவின் பெயரால், எதையும் ஆராய வேண்டும் என்ற கொள்கையுடையவனே நான். ‘எனது, ஆராய்ச்சி முடிவுகளை அதிகப் படிப்பறிவில்லாத நமது தாயக மக்கள் தவறுதலாகப் புரிந்து கொண்டு விட்டால்; தந்தை பெரியாரின் அரை நூற்றாண்டு காலப் பகுத்தறிவுப் பணி வீணாகிவிடும்’ என்ற கருத்தைத்தான் திருத்தமாக விளக்கி வருகின்றேன் நான். அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு தங்களைப் போன்று சிலர் தொடர்பு கொள்கிறார்கள்.
நண்பரே, தங்களைப் போன்ற ஆர்வமுள்ள சிலராவது உதவிட முன் வந்தால், தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பணி அணி பெற, துணை பெற, நிலைத்து நிற்க, பெரிய பயன் விளைவிக்க என் ஆராய்ச்சிகள் விரைவில் நூல்களாக வெளிவரும்.
தந்தை பெரியார் நம் சமுதாயம் கரடுமுரடான காடாக இருப்பதை அறிந்தார். காட்டை அழித்தார். பெரிய பெரிய கற்பாறைகளை வெடி வைத்துத் தகர்த்தார். அவ்வளவோடு அவர் வாழ்வு முடிந்தது. இனிமேல் தான், உண்மையான பணி இருக்கின்றது. முட்புதர்களை, பயனற்ற செடி கொடிகளை வெட்டியும், எரித்தும், சிறுசிறு கற்களை அகற்றியும், கிணறு தோண்டியும், ஆற்றுநீர் ஏரிநீர் கொணர்ந்தும், வரப்புகள் கட்டியும், வாய்க்கால்கள் வெட்டியும் நல்ல கழனிகளை, நஞ்சைகளை உருவாக்கும் சமுதாயப் பணியும் கடமையும் நமக்குத்தான் உண்டு.
நாம், சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் விரைந்து, குறுகிய காலக் கட்டத்துக்குள் மிகப் பெரிய அளவில் செயல்பட்டிட்டால்தான்; தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வினால் ஆற்றப்பட்ட தன்னலமற்ற தொண்டின் பயனால் நம் சமுதாயம் என்னும் காடு பெற்றிட்ட மிகப் பெரிய சீர்திருத்தம் நல்ல கழனிகளெனும் பயனடைய நிலையேற்படும். அதற்காக, யாரேனும் கிடைக்க மாட்டார்களா? என்ற ஏக்கத்தில்தான், தனிமையெனும் கொடிய பாலையில் நெடிய பயணத்தைத் துவக்கிட்டேன். நீங்கள் பாலைவனச் சோலையாகக் கிடைத்துள்ளீர்கள். (You are an Oasis). உங்களை நான் இழக்கவே மாட்டேன். நீங்கள் ஒருவர் எனக்குத் துணையாகக் கிடைத்தால் கூடப் போதும். நான், பல அரிய பெரிய உயரிய சீரிய பணிகளை விரிவாகவும், விரைவாகவும் செய்திடுவேன்.
நண்பா! உன் கொள்கைப் பற்றே என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது. உன் புகைப்படம் இருந்தால் உடனே அனுப்பு. உன் குடும்பத்தார், உறவின் நிலை, நண்பர்கள்... பற்றி விரிவாக எழுது. உன்னை எனது உயிருக்குயிரான நண்பனாக ஏற்கிறேன். எனது நண்பர்களை உனக்கு அறிமுகப் படுத்துகிறேன். நான் சொல் வீரனல்ல; செயல் வீரன் (A man of Action).
நான் எனது குறிக்கோள்களை (Mottos), கொள்கைகளை (Principles), திட்டங்களை (Plans and Schemes), ... மிகத் தெளிவாக எழுதி முடித்துள்ளேன். கார்ல் மார்க்சும், ஏங்கசும் கம்யுனிசக் கொள்கையை இலக்கியமாக (Capitalism, Marxism, Religion and Science, Colonialism.... etc) எழுதிப் பல நூல்களாக வெளியிட்டதால்தான், இன்று உலகில் பாதிக்கு மேல் அவர்களின் கருத்து ஆளுகிறது. எனக்கு கொள்கைத் தெளிவு, குறிக்கோள் நம்பிக்கை, செயல்திறம், ஆர்வ உரம், ............... தமிழர்கள் மறப்பதற்குள்ளேயே நாம், நம் அறிவுப் பணியைத் தொடர வேண்டும்.
1. சாதிகள் எப்படித் தோன்றின? ஏன் தோன்றின? எவரெவரால் வளர்ந்தன? அவற்றை அழிக்க முயன்றவர்கள் யார்? யார்? அவர்களெல்லாம் வெற்றி பெறாததற்குக் காரணம் என்ன? சாதிகளை ஒழிக்க முடியுமா? முடியாதா? பெரியார் பெற்ற நிலை என்ன? பெரியாரின் பணி சாதியைப் பொறுத்தவரை தொடருமா?
2. கோவில்கள், பூசைகள், விழாக்கள், சமய இலக்கியங்கள்.... எப்படிப் பிறந்தன? எவ்வாறு வளர்ந்தன? அவற்றை எதிர்த்து மறுத்து அழிக்க வேண்டுமா? வேண்டாமா? அது முடியுமா? முடியாதா? அது பயன் தருமா? தராதா? மாவீரர் பெரியாரின் கோவில் எதிர்ப்புப் பணியின் விளைவுகள் என்ன? இனி விளைவு என்ன?
3. ஆரிய ஆதிக்கம், வேத நெறி, வடமொழி (Sanskrit), பார்ப்பன உயர்வு .... முதலியவை எப்படித் தோன்றின? எவ்வாறு வளர்ந்தன? இவற்றை அழிக்க முடியுமா? முடியாதா? தந்தை பெரியாரின் அஞ்சா நெஞ்சம் தொடுத்த போரின் முடிவு என்ன? பின் விளைவு என்ன?
4. பெரியார் ஈ.வெ.ரா.வின் பணியால் சாதி ஒழிந்ததா? கோயில்களில் கூட்டம் குறைந்ததா? மந்திர மாயையில் உள்ள நம்பிக்கை நலிந்ததா? நசிந்ததா? பார்ப்பனர்கள் இழிந்தார்களா? பகுத்தறிவு வளர்ந்ததா?..... அவருக்குப் பின் அவரது பணி நிலைக்குமா? அவரைக் கடவுளாக்கிடுவார்களா? உலகம் அவரை உணருமா?
5. தமிழ்மொழித் தூய்மை, செம்மொழி நிலை தமிழகத்தில் வளர்க்கப் படுமா? முடியுமா? தமிழினம் சாதி சமயங்களை விடுத்து ஒற்றுமைப்படுமா? முடியுமா? சமதர்மம் மலருமா? பகுத்தறிவு வளருமா?
6. பகுத்தறிவு சொன்ன புத்த மதமும் சமண மதமும் அழிக்கப் பட்டது போல்; பெரியாரின் கொள்கை அழிக்கப் படாதா? அழிக்கப் படுமா? பெரியார் நெறி மதமாகுமா? இந்துமதத்தால் விழுங்கப் படுமா?
நண்பா! பகுத்தறிவு நிலையில் நாம் சிந்திப்போம். இந்த அஞ்சலையே ஒரு சிறு நூலாக வெளியிட்டு அச்சிட்டுச் சில நூறு பிரதிகள் எனக்கு அனுப்பி வையுங்கள்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
குத்தூசி குருசாமி அவர்களின் கனவு நனவாகுக!
தமிழ்ப் பற்று செழிப்புறுக!
தமிழ் தூய்மை பெறுக!
தமிழன் இன உணர்வு பெறுக!
தமிழ்நாடு ஒற்றுமை பெறுக!
அறிவே நம் நெறி!
".... அதனாலே, தோழர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! முதலில் பார்ப்பானை ஒழிக்கணும். சாத்திரம் சம்பிரதாயம் சடங்கு அது இதுன்னு தமிழன் தன் பணத்தைப் பாழாக்கிப் பார்ப்பான் காலிலே விழுவதைத் தடுக்கணும். தமிழனுக்குத் தன்மான உணர்வு, சுய மரியாதை உணர்வு .... எல்லாம் ஏற்பட்ட பிறகுதான் தனிநாடு கிடைக்கணும். அதுவரை எனக்கு அரசியலைப் பற்றிக் கவலையில்லை. யாரு மந்திரியா வந்தாலும் எனக்கு அக்கரையில்லை. தமிழன் தன் இனத்தை மதிக்கணும்...” - என்று இப்படித் தெளிவாகப் பேசினார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள்.