‘காயம் + திரி + மந்திரம் = காயந்திரி மந்திரம்’ என்ற பேருண்மை தெரியாததால் தமிழர்கள், ஆரியர்களுக்குரிய வடமொழி ‘சமசுக்கிருதம்’ மந்திரமே ‘காயத்திரி மந்திரம்’ என்று தவறாகக் கருதுகிறார்கள். இது தவறு.
“மெய் உய்ய, மெய்யும் உயிரும் வாய்மை பெற, பத்தி சத்தி சித்தி முத்தி எனும் நான்கு நிலைகளைப் பெற்றிட, அச்சம் இச்சை கூச்சம் மாச்சரியம் எனும் நான்கும் வாழ்வை நலிவடையாமல் காத்திடக் காயந்திரி மந்திரம் காலை மாலை இருவேளை கூறப்படல் வேண்டும்....”
என்று குருபாரம்பரியம் மிகத் தெளிவாகக் காயத்திரி மந்திரம் பற்றிக் கூறுகிறது.
பன்னெடுங் காலமாகச் சித்தர்களின் விந்துவழி வாரிசுகளன்றிப் பிறர் அறிய முடியாது இருந்த ‘கருவறை உயிர்ப்பு மந்திறம்’, ‘கட்டு மந்திறம்’, ‘ஐந்தீ வேட்டம் தோத்திறம்’ .... முதலியவைகளை யாம் இப்போது நம்மவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது புதுமை, புரட்சி, மறுமலர்ச்சி, வளர்ச்சி.... எனப் பாராட்டப் படுகிறது.
'காயத்திரி மந்தரம்' என்று சமசுக்கிருதத்தில் கூறப்பட்டு வருவதைத் தவிர்த்து தமிழில் உள்ள இம்மந்தரத்தை அனைவரும் நாடு, மொழி, இன, மத .... வேறுபாடின்றி உடனடியாகப் பயன்படுத்தித் தங்களை அமைதியான, அறிவான, இளமையான, இனிமையான .... வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டு சிறக்கும்படி வேண்டுகிறோம். தமிழில் உள்ள மந்திறங்கள்தான் குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு உரியன என்றில்லாமல் அனைவரும் பயன்படுத்தக் கூடிய விதத்தில் பதினெண் சித்தர்கள் படைத்துள்ளனர்.
இதுவே காயந்திரி மந்தரம் (காயம் = உடல், திரி = திரியாமல், மாறாமல்) ஆகும்.
சமசுக்கிருத வேதங்களால் நடக்கும் ஓமம், யாகம், வேள்வி, ..., தவம், பூசை..... முதலிய அனைத்துமே தமிழ் வேதங்களால் செய்யப்படுவனவற்றால் கிடைக்கும் பயன் போல கோடியில் ஒரு பங்கு கூடத் தர முடியாதவை. இதனால்தான், சித்தர்கள் கட்டிய 48 வகையான வழிபாட்டு நிலையங்களும் அருள்நலம் குன்றிப் பொலிவிழந்து விட்டன. குறிப்பாகக் குடமுழுக்கு விழாக்கள், கருவறைப் புத்துயிர்ப்புக்கள், எழுந்தருளிப் புத்துயிர்ப்புக்கள், சக்கரப் பூசைகள், ஏந்தரப் பூசைகள்.... எல்லாம் சித்தர்களின் மரபுப்படி 'இலைக் குலுங்கா நடுச் சாமத்தில்' (நடுநிசியே உயிர்ப்புப் பூசைக்குரியது - குருவாக்கு), 'அனைத்தும் உறங்கும் நள்ளிரவில்' 'அருவ, அருவுருவ ஆட்சிக்குரிய நடு யாமத்தில்தான்' செய்ய்பப்பட வேண்டும்' என்ற சித்தர் நெறி, சட்டம், ஒழுங்கு, மரபு, பூசாவிதி, படி, கட்டளை, ஆணை, அருளுரை, அறிவுரை..... முதலியவைகளை மீறி ஆரியர்கள் செயல்பட்டே இந்துமதத்தின் பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கையும் பகற்கனவாக, மாயமாக ஆக்கி விட்டார்கள். இதனால்தான் 'கடவுளைக் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை' என்று தவறான பழமொழி பிறந்தது. எல்லோருமே இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர்,.... எனும் நாற்பத்தெட்டு வகையினரையும் காணலாம், யார் விரும்பினாலும் மேற்கூறிய 48 நிலைகளில் யாராகவும் மாறலாம்.... என்ற சித்தர் நெறியே மக்களுக்குத் தெரியாத ஒன்றாகிவிட்டது.
காயத்திரி மந்திரம் என்று ஒலியைக் குறிக்கும் பொருளற்ற சொற்களால் உருவான ஒரு பூசை மந்திரத்தை உருவாக்கி அதனை ஆரியர்கள் ஓதுவதன் மூலம் தமிழர்கள் தங்களிடமிருந்த காயந்திரி மந்தரம், மாந்தரம், மாந்தரீகம், மந்திரம், மந்திறம்.... என்பவைகள் ஆரியர்களிடமிருந்து வந்தவையென்றும், ஆரியர்கள் சமசுக்கிருதத்தில் ஓதுவதுபோல் ஓதினால்தான் பயனென்றும் கருதித் தங்களுடைய ஐந்தையும் விட்டு ஆரியருடைய காயத்ரீ மந்த்ரத்தையே ஓத ஆரம்பித்து நாளடைவில் அதனால் பயன் தெரியாமையால் அதனையும் ஓதாது விட்டு விட்டனர். இதுதான் சமசுக்கிருதத்தால் தமிழுக்கும் தமிழருக்கும் இந்துமதத்துக்கும் ஏற்பட்ட பேரழிவு, பெருங்கேடு.
காயந்திரி மந்திரங்கள் தமிழர்களுடையவைதான். தமிழில்தான் முதன் முதல் பதினெண் சித்தர்களால் படைக்கப்பட்டன.
காயந்திரி மந்தரம் பெரியவர், சிறியவர், ஆண், பெண்...... என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓதிப் பதினெட்டாண்டுகளில் மனித வாழ்வுக்குத் தேவையான சத்திகளைப் போதுமான அளவு பெற்றுக் கொள்ள உதவுகிறது.
காயந்திரி மந்தரத்தைச் சொல்லுகின்ற பெண் தன் மனதில் எந்தக் கடவுளை நினைக்கிறாளோ அந்தக் கடவுளாகவே மாறிவிடுகிறாள்.
சூரியனை முழுமுதலாகக் கொண்டு அவனிருக்கும் திசை நோக்கித் தொழுவதுதான் காயந்திரி மந்தரம்.
சாதாரண மானுட வாழ்வில் கடவுளின் அருளைத் தேவையான அளவு பெற்று நிம்மதியும், நிறைவும், அமைதியும், அன்பும் உடைய வாழ்வு வாழ்ந்திடக் காயந்திரி மந்தரம்தான் பேருதவி புரியும். அன்றாடம் 108 முறை ஓதினால் போதும். எல்லா நலங்களும், விழிச்சிகளும், எழுச்சிகளும், செழுச்சிகளும் ஏற்பட்டிடும்.
ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியில் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தை ஒலி நயம் கெடாமல் அன்றாடம் நூற்றெட்டுத் (108) தடவை ஓதினால், பத்தி, சத்தி, சித்தி, முத்தி.... முதலியவற்றில் படிப்படியாகத் தேர்ச்சியடைவான். நாடு, மொழி, இனம், காலம்.... என்ற எல்லைகளைக் கடந்து இப்பூவுலகில் வாழும் எந்த மனிதன் வேண்டுமானாலும் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தைச் சொல்லி அருளுலகச் செல்வங்களை அடையலாம் (காயந்திரி மந்தரம் ஓர் உலக மந்தரம், மத வேறுபாடு இல்லாமல் ஓதலாம்). ஏனெனில், இவ்வுலகில் உள்ள அனைத்து வழிபாட்டு நிலையங்களும், வழிபடு நிலையினரும், வழிபாட்டு வாசகங்களும்.... பதினெண் சித்தர்களால்தான் உருவாக்கப்பட்டவை.
ஞானி, தவசி, கடமைவீரர், இளைஞர், அருளாளர்.... முதலியோர்கள் ஒரு நாளைக்கு ஆறுகாலம் காயந்திரி மந்தரத்தை ஓத வேண்டும். இது காயசித்தி, மாயாசத்தி, ஓயாசத்தி, சாயாசத்தி.... எனும் நாற்பத்தெட்டு வகைச் சித்திகளையும் வழங்கும்.
ஒவ்வொரு தமிழரும் உடனடியாக அன்றாடம் பதினெண்சித்தர்கள் பகர்ந்துள்ளது போல் காயந்திரி மந்தரம் முறையாக ஓதி நிறைவான அருள்நிலைகளைப் பெற வேண்டும். அதுதான், தனி மனிதர்களைக் காக்கும். தமிழைக் காக்கும், இந்துமதத்தைக் காக்கும்.
அனைத்து அருளாளர்களும், அருளுலக ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் காயந்திரி மந்தரம் ஓதி அருட்செல்வர்களாக உருவாவதுதான், இந்து மத மறுமலர்ச்சிப் பணியை வெற்றி பெறச் செய்யும்.