பதில்: பிறணவம் = பிற + ஆணவம்
அதாவது ஆணவம் என்ற உணர்வினால் அகம்பாவம், கன்மம், மாயை முதலியவைகள் அதிகமாகி அருளுலகத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் செய்து விடும். எனவே, இந்த ஆணவம் பிறக்காமலே தடுக்கக் கூடிய மந்தர, மந்திர, மந்திறங்கள்; சாத்தர, சாத்திர, சாத்திறங்கள்; தோத்தர, தோத்திர, தோத்திறங்கள்; துதிகள், போற்றிகள், வாழ்த்துக்கள், பரவல்கள், அரற்றல்கள்...... முதலிய அனைத்துக்கும் பிறப்பிடமாக, அதாவது கருவாக இருப்பவை என்று பொருள். எனவேதான், பிறணவத்திற்குரிய எழுத்துக்கள், அட்சரங்கள் என்று சிறப்பாகக் குறிக்கப் படுகின்றன.
இவற்றை காலப்போக்கில் தமிழ் எழுத்தின் வடிவங்கள் பதினோரு முறை பதினெண் சித்தர் பீடாதிபதிகளாலும் மாற்றப்பட்டு இருப்பதால், ஒலி வடிவாகவே வைத்திருக்கிறார்கள். எனவேதான், சக்கரங்களுக்குரிய எழுத்துக்களை எழுதாமல், அவற்றின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம், திருநீறு, குருதி..... முதலியவற்றில் ஏதாவது ஒன்றைப் பூசி பிறணவ எழுத்துக்களை முறையாக உருப்போட்டு (உச்சரித்து) அந்த ஒலி அலைகள் தகட்டின் பதியுமாறு செய்வார்கள். இது பதினெண் சித்தர் பீடாதிபதிகளால் மட்டுமே செய்யப்படக் கூடிய ஒன்றாகும். அவருடைய வாரிசாக, சத்தியாகத் தயாராகக் கூடியவர்களும் பதினெண் சித்தர் பீடாதிபதிகளின் அருளால் பிறணவ எழுத்துக்களை உருப்போடும் ஒலியால் சக்கரங்களில் பதிக்க முடியும்.
காற்று கருப்பு பேய் பிசாசு என்ற நான்கு கட்டுக்கடங்காத அருளுலகத்தவர்களையும்; குடும்ப ஆண்டவர், குலதெய்வம், கிராமத்து தேவர் தேவதை, நாட்டுக் கடவுள்கள் எனும் கட்டுப்பாட்டுக்குரிய நான்கு அருளுலகத்தவர்களையும் சந்திக்க உதவும் இந்த பிறணவ எழுத்துக்கள், அட்சரங்கள் பதினெண் சித்தர்களின் தாய்மொழியும், அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியுமான அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியில்தான் இருக்கின்றன. எனவேதான் கடவுளர்களைக் கண்டவர்களும், காணுபவர்களும், கடவுளர்களாகவே மாறியவர்களும், மாறிக் கொண்டிருப்பவர்களும் தமிழர்களாகத்தான் இருக்க முடியும்!