பதில்:- இங்கு தேவாரத்திலுள்ள ஆண்டவர் என்ற சொல்லை நேரடியாகக் கடவுள் அல்லது தெய்வம் அல்லது இறை என்ற சொல்லுக்கு இணையாக நினைத்தது மாபெரும் தவறு. தேவாரத்தில் இந்த ஆண்டவர் என்ற சொல், மாண்ட பெரியவர் = அருளுலக அருளாளர், பொருளுலக அரசர், பெருநிலக் கிழார், பெருஞ்செல்வர் முதலியோரைக் குறிக்கும். அதாவது, சமாதுகளில் செத்தார்களாக இருப்பவர்களை மீண்டும் அருவுருவ நிலைகளில் எழுப்பி அவர்களின் தோல்விகளையும், ஏக்கங்களையும், குறைகளையும் நிறைவு செய்து தருபவர்களே சித்தர்கள் என்பதே பொருளாகும்.
குறிப்பு:- சித்தர்கள் மனிதர்களின் நல்வினை, அல்வினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து இப்பிறப்பில் வழிபடு நிலையினர் என்ற 48 வகையினரில் ஒவ்வொரு நிலையினராகப் படிப்படியாக உயருவதற்கு உதவுபவர்களே ஆவார்கள். அதாவது அல்லா, அத்தா, அத்தன், அப்பன், அம்மையப்பன், ஆண்டவன், இறை, இயவுள், ஈசன், கடவுள், தெய்வம், பட்டவர்.... கணபாடிகள் எனப்படும் 48 வகையினரே உலகத்தவரால் பொதுவாகக் ‘கடவுள்’ எனப்படுகின்றனர். இந்த 48 வகைக் கடவுள்களையும் முறையான பயிற்சியாலும், முயற்சியாலும் உரிய பரிகார வழிமுறைகளாலும் உருவாக்குபவர்களே சித்தர்கள்.
எனவே, கடவுளைக் கண்டு தெளிந்தவர்களல்ல சித்தர்கள். கடவுள்களை யெல்லாம் அடிக்கடி கண்டு தெளிய முற்படும் உயரிய நிலை பெற்றவர்களே சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால் கடவுள்களின் கடவுள்களே சித்தர்கள்.
இவர்கள் அண்ட பேரண்டங்கள் முழுவதும் தங்களின் அமுதத் தமிழ் மொழியால் கருவழி வாரிசுகளையும், குருவழி வாரிசுகளையும் உருவாக்கி இந்துமதம் எனும் ‘சித்தர் நெறி’யால் ஆளுகின்றார்கள். இது ஒரு பகுத்தறிவு மதம் (A Rationalistic Religion). இது ஒரு சமூக விஞ்ஞானம் (The Siddharism namely the Induism is a Social Science). இது ஒரு அநுபவப் பூர்வமான தத்துவம் (It is a Practical Philosophy). இது நாடுகளுக்கும், காலங்களுக்கும் ஏற்பப் பயிரினங்களையும் உயிரினங்களையும் பாதுகாத்து மேம்படுத்துகிறது.
எனவே, கண்மூடித்தனமாக சித்தர்களைப் பற்றியோ சித்தர்களின் சித்தாந்தத்தைப் பற்றியோ கருத்துக்களைத் தரும் சிறுபிள்ளைத்தனம் கைவிடப்பட வேண்டும். இத்திருத்தத்தை ஏற்றுத் திருந்துதல் வேண்டும்.