Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar

URL: www.gurudevartamil.indhuism.org/Elanampattiyaar/?%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

தமிழர்களின் அறிவியல்

உயிரினங்களின் வளர்ச்சி பற்றி, டார்வின் ஆராய்ந்து கண்டதாகக் கூறப்படும் உண்மைகள்; பலகோடி ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரால் கண்டுபிடிக்கப் பட்டவைகள் ஆகும். கிடைத்துள்ள இலக்கியச் சான்றுகளின் படிப் பார்த்தால்; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மைகள் தமிழரால் உணரப் பட்டிருந்தன என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

இன்றைய தென்னிந்தியாவும், கடலுக்குள் மூழ்கிய குமரிக் கண்டமும் உலகில் தோன்றிய முதல் நிலப் பரப்புக்கள் என்பதால்; ஆயிரத்து முன்னூற்றைம்பத்தொன்பது அண்டங்களையும் ஆளும் பதினெண் சித்தர்கள்; இந்நிலப் பகுதியிலேயே தங்களின் பணியைத் துவக்கினர். அதனால்தான், தமிழர்களுடைய இனத்தில், நாட்டில், மொழியில் பதினெண் சித்தர்களின் பாரம்பரியம் அமைந்துள்ளது. அப்படி அமையப் பெற்றும், தமிழர் தங்களை உயர்வாக எண்ணாததாலும், அளவுக்கதிகமான அடக்கப் பண்பைப் பெற்றிட்டதாலும், தங்களின் அருந்திறங்களை, பயன்மிக்க சமயக் கருத்துக்களை உணரத் தவறி விட்டனர். அதனால், இவற்றை உலகம் உணரும் வாய்ப்பு ஏற்படாமல் போயிற்று.

டார்வின் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவரே. ஆனால், கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே இவர் கண்ட உண்மைகள் கூறப்பட்டிட்டன. அந்த இலக்கியம் இன்றும் இருக்கின்றது.

"புல்ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅநின்ற இத்தாவரச் சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமானே!"
- மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் - சிவபுராணம்

இந்த உண்மையினை ஈண்டு நினைவு படுத்தியது, 'தமிழர் அறிவியலில் மிகச் சிறந்த நிலையினைப் பெற்ற பிறகே, சமயத் துறையில் ஆழ்ந்த, அதிகக் கருத்தைச் செலுத்தினர்' என்பதை அறிவிப்பதற்காகவே.