ஓலை: 31
கடவுட் கலைகள் தெய்வீகக் கலைகள் பேய்க்கலைகள்
நோய்க் கலைகள் தேய்கலைகள் பயிற்றப் பட்டன
கலைகள் வளரச் சிலைகளும் கலைக் கூடங்களும் உலைக்கலமாயின
நிலையான நிமிர்வாழ்வு செந்தமிழர் பெற்றிட
அண்டபேரண்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.
ஓலை: 32
உருவங்கள் அருவங்கள் அருவுருவங்கள்
விரைந்தே கருவறை குருவறைகளில் குடியேறின
திருநின்ற தெய்வ நாடாய் தீந்தமிழகம்
வளர்ந்தாலும் அரசு கெட்டுப் பட்டிட்டது
சமுதாயப் புரட்சியை நம்பியவர் அரசைக்
கவனியாமல் அனைத்து மழிய விட்டார்.
ஓலை: 33
அன்னியர் பலர் ஆழ்கடல் பொங்கியதெனத்
தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை யழித்தனர்
எண்ணி யெண்ணிப் பதைத்தே தமிழ்ச்
சமுதாயத் தாழ்ச்சியும் வீழ்ச்சியும்
கண்ணிருந்தும் குருடரான தமிழரால்
நிகழ்ந்ததென உணர்ந்தார்.
ஓலை: 34
கன்னித் தமிழ்ச் சமுதாயம் கட்டுக்கோப்பு
விட்டதால் பட்ட பயிராயிற்று.
விண்ணிலிருந்து வந்தவரானாலும் இந்தத்
தமிழ் மானுடரைத் திருத்தலரிதே
செந்தமிழ் நாட்டு மானுடர் எந்த மானுடர்
எனப் புரியவில்லை
ஓலை: 35
எந்த மானுடர் இந்த மானுடராய்ப் பிறந்து
சொந்த மானுடரை நைந்திடச் செய்தார்
வந்த மானுடர் வண்டமிழர் வாழ்வு
தீய்ந்து கருகிடவே செய்தார்
சொந்தத் தமிழருக்குள் பற்றில்லை, பாசமில்லை,
ஒற்றுமையில்லை, கூட்டுறவில்லை
ஓலை: 36
பைந்தமிழருக்கு மொழிப் பாசமில்லை இனப்பற்றில்லை நாட்டன்பு இல்லை
ஒண்டீந் தமிழருக்குத் தன்னம்பிக்கையில்லை
தன்மானப் பிடிப்பில்லை உரிமையில்லை பெருமையில்லை
அமுதத் தமிழர் அன்னியர்க்கு அடிமையாவதில்
அளப்பிலா ஆர்வமிகு மகிழ்வு பெற்றார்.
ஓலை: 37
அந்தோ செந்தமிழர் மாநகரம் மதுரை
செந்தீயால் வெந்து கருகிச் சாம்பலாயிற்று
நந்தமிழ்ப் புலவர்கள் நாடெங்கும் கொன்று குவிக்கப்பட்டனர்
இன்றமிழ் ஏடுகள் அனலிலும் புனலிலும் எறியப்பட்டு அழியலாயின.
ஓலை: 38
வெகுண்டெழுந்த அமராவதி யாற்றங்கரைக் கருவூறார்
ஆற்றிடப் பணிகள் இருந்தன
கரந்த மலையில் மதுரைக் கூலவாணிகன்
சீத்தலைச் சாத்தனார் கொண்டு
சங்கத் தமிழ் சாகாதிருக்க கிடைத்தன
தொகுக்கச் சொன்னார்
ஓலை: 39
பங்கமுற்ற சமுதாய மலர்ச்சிப் புரட்சிப் பணியால் அங்கம் வாடினார்
எங்கும் தமிழ்ச் சமுதாயம் மங்குவதே விதியென வருந்திப் புகுந்தார் நிலவறையில்
காக்கையரும் வானகமெங்கும் கன்னித் தமிழினம் காக்கக் “கா கா” எனக் கதறியே பறக்கலானார்
ஓலை: 40
காக்கையர் கன்னித் தமிழும் நாடும் இனமும்
காக்கத் தினமும் ‘கா கா” எனவே கதறிப் பறக்கிறார்
அன்னியர் தமிழர் மென்னியை நெறிப்பது
கண்டே காக்கையர் கதறுகிறார்
காக்கையர் கதறல் காதில் விழவே பொதிகை மலைக்
குகையிலிருந்து புலியெனப் புறப்பட்டார்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் புலிக்கொடி
கட்டியே புவியாளப் புறப்பட்டார்.
யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.
ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.
அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.