இந்த எழுபத்தைந்து ‘வசன கவிதைகள்’ (Blank Verses) எமது இன்றைய நினைவாற்றலால் எழுதப்பட்டவை. இவற்றில் சொற்பிழைகள் இருக்கலாம். கவிதை வரிசைகளும், வரிகளும் மாறியிருக்கலாம். ஆனால், இவற்றால் பெரிய இழப்புக்கள் இல்லை.
நான் “எந்த மானுடன் இந்த மானுடன்” என்ற தலைப்பில் சுமார் முன்னூறு (300) வசன கவிதைகளுக்கு மேல் மனப்பாடம் செய்து இருந்தேன். ஆனால், உருப்படியாக நூறு கூட நினைவிற்கு வரவில்லை. இதுபோல், எத்தனையோ பெரிய செய்திகள் எம்மால் மறக்கப்பட்டு விட்டனவோ தெரியவில்லை. யாம் எவ்வளவோ முயன்றும் எழுத்து மங்கியும், தாள் நைந்தும், நகலெடுக்கும் வசதி வாய்ப்புக்கள் இல்லாமலும் அழிந்து வரும் தமிழ்மொழிச் செல்வங்கள் ஏராளம். இவை, உலக வரலாற்றுத் துறைக்கும், அறிவுத் துறைக்கும், தமிழினப் பெருமைக்கும் உரிமைக்குமே ஈடு செய்ய முடியாத இழப்புக்கள். “தமிழ் வாழ்க” என்று குறுகிய தன்னல நோக்கோடு கூக்குரல் எழுப்பும் தலைவர்களும் அப்பாவித் தொண்டர்களுமே மிகுந்து வருகின்றனர். ஓர் உலகப் பழம் பெரும் தெய்வீகத் தொன்மொழியின் செல்வங்கள் அழிவதை எம்மால் தடுக்க முடியவில்லையே என்றுதான் வருந்துகிறோம் யாம்.
இந்தச் சிறு பழம்பெரும் வசன கவிதை நூல், சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் உரைநடை (Prose Order) எப்படி இருந்தது என்பதை விளக்க உதவிடும். மக்கள் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கவிதை நடையில் சொற்செறிவும் பொருட்செறிவும் மிகுந்த உரைநடையைத் தோற்றுவித்த பெருமை ‘தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரால்' [கி.பி. 785-1040] தோற்றுவிக்கப் பட்டது. இக் கருத்துக்குரிய சான்றுகளாகப் பல உரைநடை நூல்கள் உள்ளன.
இவர் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் [கி.மு.100-கி.பி.150] அவர்களைப் பின்பற்றியே பழம்பெரும் இலக்கியங்களைத் தொகுப்பதிலும், புதியனவற்றை எழுதுவதிலும் ஈடுபட்டார். எனவே, தமிழ் உரைநடை அமராவதி ஆற்றங்கரை கருவூறாராலேயே விரும்பிப் பேணிப் போற்றி வளர்க்கப் பட்டிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது. அவரால் எழுதப்பட்ட உரைநடை நூல்களும் இருக்கின்றன.
இவரது காலத்தில் எழுந்த ‘ஐம்பெருங் காப்பியங்களுள்’ ஒன்றான சிலப்பதிகாரம் ‘உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்றே பாராட்டப் படுகின்றது. அதில் காணப்படும் உரைநடைக்கு நிகராகவே சித்தர்களின் இலக்கியங்களும், பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தொகுத்த இலக்கியங்களும் இருக்கின்றன. அதனால் கி.மு. விலேயே தமிழ்மொழியில் வளமான நல்ல வாலிப்பான உரைநடை நூல்கள் இருந்திருக்கின்றன என்ற பேருண்மை தெளிவாகின்றது.
இச் சிலப்பதிகாரத்துக்கு முன்பே தமிழில் நல்ல உரைநடை நூல்கள் [Books of Prose Order] இருந்திருக்கின்றன. பழந்தமிழ் நூல்களில் காணப்படும் உரைகள் கவிதை நடையில் எதுகை, மோனை நயத்தோடு இருப்பதைக் காணலாம். குறிப்பாக சங்க காலத்தில் ‘பெருந்தேவனார் பாரதம்’ என்ற நூலும்; ‘தகடூர் யாத்திரை’ என்ற நூலும் பொதுமக்கள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்ட உரைநடை நூல்கள் என்ற குறிப்புக்கள் பல கிடைக்கின்றன. பல உரை ஆசிரியர்கள் இந்நூல்களை பற்றிக் குறிப்பதோடு ஆங்காங்கே சில பகுதிகளைச் சான்றாக எடுத்தாண்டுள்ளனர். எனவே, பழந்தமிழர்கள் ஏட்டில் சுருக்கமாக எழுதவும் மனப்பாடம் செய்வதற்கு எளிமை தேவை, எதுகை மோனை தேவை என்பதாலும் கவிதை நடையையே [Poetical form of order] முழுக்க முழுக்க கையாண்டனர் என்று கருதுவது தவறாகும். அதாவது, சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்மொழியில் உரைநடை நூல்களும் இருந்திருக்கின்றன என்பதே உண்மையாகும்.
யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.
ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.
அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.