இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழையடி வாழையென சித்தர் கருவூறார் வழியில் வந்த சித்தர் ஏளனம்பட்டியார், "தமிழகத்தையோ, இந்தியத் துணைக் கண்டத்தையோ வளப்படுத்தி வளர்க்கும் குறுகிய நோக்கில் பிறந்ததல்ல சித்தர் நெறி" என்ற பேருண்மையினை உலகுக்கு அறிவிக்க 'இந்து மறுமலர்ச்சி இயக்கம்' உருவாக்கினார்.
அவர் இந்துமதம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் 'இந்து' என்ற சொல்லையே பயன்படுத்தினார். இதற்குரிய காரண காரிய கருத்து விளக்கத்தை மிகத் தெளிவாக ஏட்டிலும், நாட்டிலும் நிலைநாட்டிச் சென்றுள்ளார். அவர் மத வெறியின்றி சித்தர்களின் சாதனைகளை சமுதாய நெறியாக மாற்றுவதற்காகவே அரும்பாடுபட்டிட்டார். எனவேதான், மடங்களையோ, தனித்த கூட்டங்களையோ, அருளார்ந்த நிலையங்களையோ உருவாக்காமல் அருளுலக வாரிசுகளை உருவாக்கும் தத்துவ வித்துக்களைச் சாதி, சமய, இன, மொழி, நாடு கடந்து எங்கும் விதைத்துச் சென்றிட்டார்.
அவை எங்கும் சோலையாக இருப்பதால், அவற்றின் ஊடே சாலை அமைத்துச் செயல்பட்டார் ஞாலகுரு, ஞானகுரு, அரசயோகி, ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி, இராசிவட்ட நிறைவுடையார், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், சித்தர் கருவூறார். இவர் இன்றைய உலகியலுக்கு ஏற்ப 'இந்து மறுமலர்ச்சி இயக்கத்தை' வெளிப்படையாக ஒரு பண்பாட்டு இயக்கம், ஒரு தெய்வீகக் கழகம், அருளாளர்களின் குழு, உலகச் சமாதான சித்தாந்திகளின் மையம், ..... என்று அறிவித்து மானுட இன நல உரிமைக்காகப் பணியாற்றப் புறப்பட்டிருக்கிறார். எனவே, இந்த இயக்கத்துக்கு யாருமே எவ்விதச் சாதி, சமய, மொழி, இன, நாட்டுச் சாயம் பூச முற்படவே கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது!
இந்த இயக்கம் உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டுக்காகப் பாடுபடக் கூடிய ஓர் ஒப்புயர்வற்ற தனித்த இயக்கம். அதாவது, இந்த இயக்கம் உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தை உருவாக்குவதற்குரிய முயற்சிகளைக் கருவாக்கிக் கொண்டதேயாகும். இது தன்னுடைய கொள்கைகளையும், குறிக்கோளையும், அன்புவழியில், அற வழியில், அருள் வழியில், அமைதி வழியில், சமாதான முறையில் நிறைவேற்றுவதிலேயே முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நம்பிக்கையே என்றென்றும் இந்த இயக்கத்தின் சட்டமாகவும், திட்டமாகவும் இருந்திடும்.
எனவேதான், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் எவ்விதமான ஆரவாரமும் இன்றி, இந்தியத் துணைக் கண்டத்துள்ளும், அயல் நாடுகளிலும் நிறுவனக் கட்டமைப்புக்களை உருவாக்கினார். இவை அருளாளர்களின் பெயரிலும், கலைகளின் பெயரிலும், அறிவியல்களின் பெயரிலும், நற்பணிகளின் பெயரிலும் வடிவமைப்புப் பெற்று வருகின்றன.
இவை பேரருளின் திருவருள் திறத்தால் நிர்வாக ஒழுங்கமைப்பைப் பெற்று வளர்ந்தோங்கும் நன்னாளில் உலகம் தழுவித் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு முதலிய அனைத்திலும் பற்று, பாசம், அன்பு, தோழமை, நட்பு, அமைதி, நிம்மதி, நிறைவு, ஒற்றுமை, சமாதானம், .... முதலிய இனிய பண்புகள் அனைத்தும் கனிந்து சுவை தரும் நற்காலம் தோன்றும். அக்காலத்தை விரைவில் உருவாக்குவதற்காகவே உழைக்க அனைவரையும் அழைக்கிறோம். அதாவது, உலக மானுட நலம் செழித்தோங்க உழைக்க அனைவரையும் அழைக்கிறோம்.
யாம் எழுதியுள்ள நூற்றுக் கணக்கான நூல்களையும், ஆயிரக் கணக்கான கட்டுரைகளையும், நூறாயிரக் கணக்கான அஞ்சல்களையும் விட எண்ணிடற்கரிய சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும், சித்தர் நெறி ஆய்வாளர்களும், ஆதரவாளர்களும் உருவாகி விட்டார்கள்.
எனவே, இனிமேல் நானே நினைத்தாலும் கூட சமுதாய மாற்றத்தை உண்டாக்கிட போர்க் கோலம் பூணப் போகிறவர்களைத் தடுக்கவே முடியாது. மீண்டும் அருட்சேனைகள் திரண்டு பாரதப் போரை நிகழ்த்தியே தீரும். அதன் வெற்றியால் சித்தர்கள் குறிக்கும் ‘சமத்துவத் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப்பட்டே தீரும்.
ஓர் இலக்கண நூல் [A Grammar Book]. இலக்கியங்கள் பல தோன்றிய பிறகுதான் அவற்றை ஒழுங்கு படுத்திட இலக்கண நூல்கள் தோன்றும். அப்படிப் பார்த்தால் இந்தத் தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் சில ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளியில் பல ஆயிரம் இலக்கியங்கள் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், தொல்காப்பியத்துக்கு முன்னரே நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள் இருந்திட்டன என்பதற்குரிய அகச்சான்றுகள் தொல்காப்பியத்திலேயே இருக்கின்றன.
அதை நோக்கும் போது தொல்காப்பியத்துக்கு முன் சில நூறாயிரம் ஆண்டுகள் [இலட்சம்] தமிழ்மொழி வளத்தோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்ற பேருண்மை தெளிவாகிறது.
அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்
தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.