[குருதேவர் அறிக்கை 36இலிருந்து]
அன்புச்சேவுக!
உலகியலுக்குத் தெரிந்த வரலாற்றுப்படி இலக்காட்சியினர் (இலக்கு + ஆட்சியாளர் -> இலட்சியவாதிகள்) கடுமையான சோதனைகளையும் கொடுமையான செயல்களைச் செய்ய வேண்டிய இன்றியமையாத நிலைகளையும் அடைந்து வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அப்படி யல்லாமல், எதிர்பாராமல் எளிமையாகப் புகழும், பதவியும், பொருளும் ஈட்டியவர்கள் மெய்யான சாதனைகளைச் சாதித்தவர்களாக மாட்டார்கள். மேலும், இவர்களுடைய சாதனைகள் நிலைத்த வடிவையோ, வாழ்வையோ, பயனையோ நல்கியவையானதில்லை.
நாம், சிவன், திருமால், பிறமண் ... முதலியவர்களின் வாழ்க்கை வரலாறுகளை விஞ்ஞான நோக்கிலும், பகுத்தறிவுப் போக்கிலும் விளக்கியுரைக்கும் மாபெரும் கருத்துப் புரட்சியின் மூலம்தான் படிப்படியாகச் சமயம், சமுதாயம், அரசியல் மறுமலர்ச்சிகளை விளைவிக்க முடியும் அதனால் நமது எல்லை சமயம்தானா?! ... அல்லது இது கடந்து சமுதாயம், அரசியல் ... என்ற எல்லா எல்லைகளுக்கும் செல்ல வேண்டுமா? என்பதைச் சிந்தித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும், நாம்.
முருகன் பாலகப் பருவம் கடக்கும் முன்னரே தாய்தந்தையரின் போக்கை விமர்சித்துத் தன் போக்கில் முடிவெடுத்து அதனைச் செயலாக்கினான் என்பதையும்; இராமன் தன் மனைவி என்ற பந்த பாசங்களைக் கடந்து சீதையை நெருப்பில் நீராடவும், கொலைத் தண்டனைக்கு உரியவளாக்கிடவும் முற்பட்டான் என்பதையும்; கண்ணன் ஒரு பக்கமும் சார்பின்றிச் சமாதானத்துக்காகப் பஞ்ச பாண்டவர்களுக்காக ஐந்து வீடுகளாவது கேட்டும் தோல்வி கண்டதால் அனைவரையும் அழித்தொழிக்கப் பாரதப் போர் நிகழ்த்தினான் என்பதையும்; மகாவீரர், புத்தர், ஏசு, நபி நாயகம், காலடி ஆதிசங்கரர், அறுபத்து மூன்று நாயன்மார்கள். பன்னிரண்டு ஆழ்வார்கள், பட்டினத்தார், அருணகிரியார், தாயுமானவர், சீர்காழி வள்ளல், சந்தானாச்சாரியார்கள், இராமலிங்கர், ... முதலியோர் அனைவருமே மிகுந்த மனவலிமையோடும், சிந்தைத் துணிவோடும், சொந்தபந்தப் பாசங்களைப் போரிட்டு முறியடித்து வென்றுதான் புதிய சாதனைகளைச் சாதித்திருக்கிறார்கள் என்பதையும் நம்மவர்கள் முறையாகவும் நிறையாகவும் தெரிந்தாராய்ந்து புரிந்து கொள்ள முடியாத காரணத்தால்தான் நமது நிலைகளில் தேக்க நிலைகளும், தொய்வு நிலைகளும், மந்த நிலைகளும் மிகுந்திருக்கின்றன. அதாவது, இலக்காட்சியினர் சூழ்நிலைகளோடும் தீரத்தோடும் வீரத்தோடும் கடுமையாகப் போரிட்டு வெற்றி தோல்வி பற்றிக் கவலையின்றித் தியாகங்களைச் செய்திட்டால்தான் எதையாவது சாதித்தவர்களாகிட முடியும். அப்படிப்பட்டவர்கள் நம்மிடையில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவினராவது உள்ளனரா?
நம்மவர்களில் உலகியலாகப் பணமோ, பதவியோ, செல்வாக்கோ உள்ளவர்கள் தாங்கள்தான் இயக்கத்தையே நடத்துவதாக எண்ணிக் குருவழிச் செயல்படாமல் செயல்படுவதால் தேவையில்லாத தேக்க தூக்க நிலைகளும், சிதைவுச் சீரழிவு நிலைகளும் உருவாகுகின்றன. இதேபோல், ஊழ்வினையாலும் விதியாலும் பயிற்சி முயற்சியாலும் ஓரளவு அருட்சத்திகளையும், சித்திகளையும் பெற்றவர்கள் தங்களால் விளைகின்ற அற்ப சொற்பச் சாதனைகளையெல்லாம் எண்ணித் தாங்களே அனைத்தும் என்ற மாயைக்கும், அகம்பாவ ஆணவங்களுக்கும் உள்ளாகிடுகிறார்கள். இதனால், இவர்கள் குருவழிச் செயல்படாமலும், இந்துமத வரலாற்றுப் பேருண்மைகளை எண்ணிச் செயல்படாமலும், தங்களால் அருளுலகில் மலர்ச்சியும் வளர்ச்சியும் புதிய தோற்றங்களும் பயன்களும் விளைவதாக எண்ணி இறுமாப்புக் கொண்ட தாந்தோன்றிகளாகி விடுகிறார்கள். இருந்தாலும் குருவின் அருள் உள்ளம் அனைவரின் அகஇருளையும் புற இருளையும், அகற்றும் பணியில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனைப் புரிந்தும் புரியவைத்தும் செயல்பட்டேயாக வேண்டும், நம்மவர்கள்.
பறவையின் குஞ்சுகள் முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வருவது போலப் புதியன சாதிக்க விரும்புகிறவன், தன்னைச் சுற்றியுள்ள அனைத்து விதமான சொந்த பந்தப் பாசக் கட்டுப்பாடுகளையும், மற்ற சமூக சட்ட திட்டக் கட்டுப்பாடுகளையும் முட்டி மோதிப் போரிட்டு உடைத்தெறிந்து விட்டுத் தியாகச் செம்மலாகப் புரட்சி வாழ்வை மேற்கொண்டேயாக வேண்டும். அதற்காகத் தனிமனித வாழ்வில் பழியையும் இழிவையும், அழிவையும், இழப்பையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் வீரதீரப் போரில் விழுப்புண்கள் தாங்கிப் போராட்ட வாழ்வு வாழத் தயாராக இருப்பவனே பக்குவம் பெற்றவனாகக் கருதப் படுகின்றான். இத்தகையவனாலேயே ஆக்கச் சாதனைகளுக்குரிய ஊக்க உணர்வையும், தலைவனாகிய குருவழியே செயல்படக்கூடிய தரத்தையும், திறத்தையும் பெற்றிட முடியும், பெற்றிட முடியும், பெற்றிட முடியும் இந்த நிலையினைப் பெற்றவர்கள் நம்மில் எத்தனை பேர்? எத்தனைப் பேர்? எத்தனை பேர்? ----- என்று நடு நிலையில் நின்று சிந்தித்தால்; நமக்குத் தோல்வி நம்மவர்களாலேயே!' 'நமது தேய்நிலைகளுக்கும் ஓய்நிலைகளுக்கும் காரணம் நம்மவர்களின் ஓயாத மாயா நிலைகளே காரணம்' என்பது விளங்கிடும். அதாவது. நம்மவர்களுக்கிடையில் தன்னையறிந்தோ அல்லது தலைவனைப் புரிந்தோ செயல்படாது, தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருப்பதன் காரணமாகத்தான் அனைத்து வகையான தூக்க, தேக்க, முடக்க நிலைகளும் வளர்ந்து வருகின்றன. இனியும் இது கூடாது. இந்த 1986-ஆம் ஆண்டு டிசம்பர் மாத குருதேவர் அறிக்கையோடு 36 புத்தகங்களில் நமது கொள்கை விளக்கம் வரலாற்றுப் பூர்வமாக இலக்கியச் சான்றுகளோடும், தத்துவ ஊன்றுகளோடும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளைக் கடந்து பருவமடைந்து பக்குவப்பட்டு விட்டது. எனவே நம்மவர்கள் இந்த 36 அறிக்கைகளையும் மாதமொருமுறை முழுமையாகத் திருப்பித் திருப்பிப் படித்துக் கொண்டு விட்டால் போதும்; பாடி வீடுகளும் பாசறைகளும் முழுமை பெற்றுவிடும்.
அன்பு
குவலய குரு பீடம், அருளாட்சி நாயகம்,
குருமகா சன்னிதானம்,
ஞாலகுரு சித்தர் கருவூறார்.
"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."
"...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."