[குருதேவர் அறிக்கை 30இலிருந்து]
அன்புச் சேவுக!
நாம் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறந்த வளர்ச்சியினைத் தமிழ் நாடெங்கும் பெற்றிருக்கிறோம். நமது இயக்க நேரடி உறுப்பினர்கள் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் நன்கு பரவியிருக்கின்றனர். நம்மிடையே கொள்கைத் தெளிவும் குறிக்கோள் பிடிப்பும் உடையவர்கள் எண்ணிக்கையில் நூறின் மடங்குகளாகிவிட்டார்கள் நம்மைச் சார்ந்தவர்களின் நிகழ்ச்சிகளில் பத்தின் பலமடங்கினர் இயக்கத்தவர்களாகவே கூடுகின்ற நிலையும் வளர்ந்திட்டது. நமது அ.வி.தி செயல்வீரர்களின் சுற்றுப்பயணங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வருகின்றன. சற்றும் எதிர்பாராத வகையில் நம்மவர்களில் தயங்கியும், மயங்கியும், தேங்கியும், நாணியும் ஒதுங்கி யிருந்தவர்கள் கூட எத்தகையத் தியாகத்தையும் செய்யத் தயாராகிவிட்டார்கள் நாடெங்கும் அ.வி.தி நிலையங்கள் செயல்பட்டு மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கும் பணியும் வளமுற்றுவிட்டது. நமது அ.வி.தி நிலையங்களாக மாறியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து நமது வளர்ச்சி வளமான, வலிமையான, வளர்ச்சிதான் என்று எண்ணி பெருமைப்படவேண்டும் நாம்.
ஆர்வம்மிக்க, பொறுமைமிகு இனிய நண்ப! நமது வளவளர்ச்சி வலிவும் பொலிவும், பெற்றிருந்தாலும் அதனுடைய செயல்நிலை முறையும் நிறையும் (A Systamatic Order and a Perfect functioning) பெற்றுத் திகழவில்லை அதாவது நமது செயல் நிலைகள் புதிய புதிய நிறுவனக்கட்டமைப்புக்களையும், தலைமையின் செயல் திட்டங்களின்படி இயங்குகின்ற நிர்வாக ஒழுங்கினையும் பெற்றிடவில்லை என்பது வருத்தத்தோடு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதாவது இன்றைய நிலையில் பல இலட்சம் மக்களுக்கு மேல் நம்மையும், நமது இயக்கங்களையும், நமது கருகுலம் குருகுலம், திருகுலம் போன்ற நிறுவனங்களையும் நன்கு தெரிந்து புரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பேரார்வத்துடன் நமக்கு பேராதரவை வழங்குபவர்களாகவே இருக்கிறார்கள் இப்படிப் பட்டவர்கள் பெரிய பெரிய நகரங்கள் முதல் சின்னஞ்சிறு கிராமங்கள், பட்டிதொட்டிகள், களத்துவீடுகள் ..... முதலிய எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறார்கள். ஆனால் இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி இயக்கமாக இயங்கச் செய்யும் முறைகள்தான் அதாவது செயல்நிலைகள்தான் வளவளர்ச்சி பெறவில்லை, வலிவு பெறவில்லை. பொலிவு பெறவில்லை, இப் பேருண்மையினைப் புரிந்தும் புரிய வைத்தும் செயல்படப் புறப்பட்டேயாக வேண்டும். நம்மவர்கள் இதற்காகப் பேரன்பு கூர்ந்து தாங்கள் பலருக்கும் அஞ்சல் அனுப்புங்கள். சென்னையில் இ.ம.இ பயிற்சி மன்றம் பல செயல் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுவது போல் அ.வி.தி தலைமைச் செயலகமான குருகுலத்திலும் பல செயல்திட்டங்களை உருவாக்கியே தீரவேண்டும்.
இ.ம.இ.யின் மக்கள் தொடர்பு அமைப்பாக அ.வி.தி தான் பேராற்றலுடன் இருக்கிறது இதற்காக குருகுலத்தில் மாதந்தோறும் நடக்கும் பருவபூசையை அடிப்படையாக கொண்டு மக்களுக்கு அநுபவப் பூர்வமாக, உணர்வுப் பூர்வமாக நமது மெய்யான இந்துமதத்தை வழங்கும் பணி நிகழ்ந்திடல் வேண்டும். அதாவது 'மெய்யான இந்துமத உணர்ச்சி!, மெய்யான இந்துமத வளவளர்ச்சி!, மெய்யான இந்து மத ஆட்சிமீட்சி!, மெய்யான இந்துக்கள் எனப்படும் மதவாதிகளிடையே ஒற்றுமையுணர்ச்சியின் எழிச்சி!, மத வேறுபாடில்லாமல் மெய்யான இந்துக்கள் உலக அருளாளர்களை வழிபட்டுப் பயனடையும் மத ஒருமைப்பாட்டுணர்ச்சியின் கிளர்ச்சி வளர்ச்சி!, படிப்பறிவில்லாத பாமரர்களும் மதத் தத்துவங்களையும், மதப் பெரியார்களின் வரலாறுகளையும், தெரிந்து கொள்ளுமாறு செய்யும் கருத்துப் புரட்சியின் செழிச்சி!, எழுதப் படிக்கத் தெரிந்த மக்களிடையே தழிழ் மொழிதான் அருளுலக ஆட்சி மொழி என்ற பேருண்மை விளங்கச் செய்யும் தமிழின விடுதலைப்புரட்சி முயற்சி மறுமலர்ச்சி!, அனைத்து வகையான கலைத் துறைகளிலும் தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சி விளைவதற்குரிய இலக்கியப்புரட்சி!...' முதலியவைகள் உருவாவதற்குரிய பயிற்சிகளை வழங்கும் முயற்சிகள் நம்மவர்களால் விரைந்தும் விரிந்தும் மேற்கொள்ளப் பட்டேயாக வேண்டும். இந்த அழைப்பின் அடிப்படையில் நாம் செலவழிக்கப் போகும் உழைப்பின் அளவைப் பொறுத்துத்தான் நமது விரிந்த, விரைந்த வளவளர்ச்சியின் வடிவமைப்புச் செய்ய முடியும்.
அடக்கத்திலும் அமைதியிலும் அரும்பணியாற்றிடும் சீரிய நண்ப! தாங்கள் எங்குமுள்ள நமது இயக்கத்தவர்களுடன் நிறுவனங்களைச் சார்ந்தவர்களுடனும் தொடர்ந்து கடலலை பொலத் தொடர்பு கொண்டு அவரவர் அவரவருடைய அறிமுக வட்டாரங்களுக்குட்பட்ட மக்களிடமிருந்து தெளிவான முகவரிகளைப் பெற்று மாதாமாதம் ரூபாய் இரண்டு பெற்று பருவ பூசைக்காக அனுப்புமாறு ஏற்பாடு செய்யுங்கள். இதில் ரூபாய் ஒன்று இ.ம.இ பயிற்சி மன்ற உறுப்பினர் தொகையாகவும் 50 காசு பருவபூசைச் செலவுக்காகவும், 50 காசு அருளுறு யாகச் சாம்பலை அனுப்பும் அஞ்சல் செலவாகவும் பயன்படுத்திக் கொள்ளப்படல் வேண்டும், பருவ பூசைக்காக ஒதுக்கப்படும் 50 காசை ஒரே நாளில் (பருவ பூசைநாளில்) ஆடம்பரமாகவோ, ஆரவாரமாகவோ, அளவுக்கதிகமாகவோ செலவிட்டு விடக்கூடாது. அதாவது மாதம் முழுவதும் நிகழ்கின்ற குருகுலப் பூசைகளுக்கு இந்தப் பருவ பூசை வசூலைத் திட்டமிட்டு செலவழிக்க வேண்டும். அப்போதுதான் இ.ம.இ பயிற்சி மன்ற நிறுவனமும் அ.வி.தி. நிறுவனமும் இணைந்து வலிவோடும், பொலிவோடும். செயல்படமுடியும் இதற்காக நமது அ.வி.தி. நிறுவனங்களுக்கு வரும் மக்களிடம் அனைத்து வகையான நலிவுகளுக்கும் மெலிவுகளுக்கும், பாதிப்புக்களுக்கும் பரிகாரமாக மாதாமாதம் குருகுலத்தில் நடக்கும் பருவ பூசையிலிருந்து அருளூறு யாகச் சாம்பலைப் பெறுவதற்காக ரூபாய் இரண்டு காணிக்கையாகப் பெறும் திட்டத்தைச் செயலாக்குமாறு வேண்டுகோள் அனுப்புங்கள் இதுபோல், நமது அனைத்து அ.வி.தி செயல் வீரர்களுக்கும் அறிவிப்பு வேண்டுகோள் அனுப்புங்கள் நமது குருகுலத்திற்கு வந்து செல்பவர்களிடம் நமது இந்துச் செயல்திட்டத்தை விளக்கிக் கூறுங்கள்.
எத்தகைய ஏழை எளிய பாட்டாளிப் பாமரர்களாக இருந்தாலும் உடல் நோய்க்கு மருந்து வாங்குவதற்குச் செலவழிப்பது போல அல்லது உள்ளத்திற்கு விருந்திற்காக திரைப்படம் போன்ற பொழுதுபோக்கிற்குச் செலவழிப்பது போல அருட்சத்தியினை தங்களது வாழ்விற்கு மருந்தாகவும், விருந்தாகவும் பெற மாதத்திற்கு ரூபாய் இரண்டு செலவழிப்பது மிகமிகச் சாதாரணமான சுலபமான செயலாகும். இத்திட்டத்தின்படி சேருகின்ற மக்களனைவரையும் வரிசை எண் கொடுத்து (Serial No) பேரேட்டில் எழுதுங்கள் மாதமாதம் 1+2=3 நகல் எழுதி, அதாவது புதியதாகச் சேருபவர்களின் பெயர் எழுதி, முழுமுகவரியையும் எழுதி, பழையவர்களின் வரிசை எண்ணையும் பெயரையும் எழுதி தலைவர், பொறுப்பாளர், நிறுவனக் குழு மூவருக்கும் அனுப்புங்கள் குருவாணை.
குவலய குருபீடம் ஞாலகுரு சித்தர் கருவூறார்.
"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."
"...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."