[குருதேவர் அறிக்கை 27இலிருந்து]
அன்புச் சேவுக,
1. நாம் பதிப்பகம் வைத்து பல்லாயிரக்கணக்கான அறிவிக்கைகளை அச்சிட்டு அன்னை நாட்டு மக்களுக்கு பட்டி தொட்டி, குக்கிராமம் முதல் பெரிய பெரிய ஊர்கள், நகரங்கள் என்று அனைத்திடங்களிலும் எந்தவித வேறுபாடுமின்றி வழங்கி வருகின்றோம். இதில் நம்மால் சாதிவெறியோ, மதவெறியோ, வட்டாரவெறியோ ஊக்குவிக்கப்படவே யில்லை. இருந்த போதிலும், நம்மை நமது தாயக மக்களே முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாமல் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது, இதற்குக் காரணம் நம்முடைய அறிவிக்கைகள் வழங்கும் தத்துவமும் சித்தாந்தமும் முழுமை வடிவில் மக்களைச் சென்றடையவில்லை என்பதுதான்.
2. மேற்படிக் கருத்தை நமது நிறுவன நிர்வாக உறுப்பினர்கள் ஆராய்ந்து 'குருதேவர்' என்ற பெயரில் நமது இயக்கத்தவர்க்கு மட்டும் வழங்குவதற்குரிய அறிக்கை ஒன்றினை மாத மலராக வெளியிடும் திட்டத்தைச் செயலாக்கினர். இதனால் இம்மாதத்தோடு (26) இருபத்தாறு மலர்கள் வெளிவந்திருக்கின்றன இது ஒரு மாபெரும் சாதனையே. இந்தியத் துணைக்கண்டத்திலேயே இப்படித் தத்துவத்தையும் செயல் சித்தாந்தத்தையும் கொள்கையையும் குறிக்கோளையும் கொள்கை விளக்க முழக்கங்களையும் இயக்கப் பாரம்பரிய வரலாற்றினையும் தெளிவாக எழுதி அச்சிட்டு கொடுத்திருக்கக் கூடிய ஒரே ஒரு இயக்கம் நமது இயக்கம் தான். உலக அளவில் பொதுவுடமைச் சித்தாந்தத்தை மேலை நாட்டினர்க்கு முதன் முதல் விளக்கிய (கீழைய நாடுகளில் பொதுவுடைமைச் சித்தாந்தம் என்றென்றும் இருந்து வருகின்றது அதாவது, சித்தர்நெறி எனப்படும் இந்துமதம் தான் மிகச் சிறந்த பொதுவுடமைத் தத்துவம், கம்யூனிசம் என்பது மேலை நாட்டார்க்கு இன்னும் தெரியாது) காரல் மார்க்சு அவர்கள்தான் தமது இயக்கத்திற்குத் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும், கொள்'கையையும், குறிக்கோளையும் கருத்து விளக்க முழக்க வாசகங்களையும் எழுதி வழங்கினார்.
எனவேதான் அது உலக முழுவதும் பரவியது. இப்பொழுது அதை விடச் சிறந்த நமது சித்தர்நெறி [The Siddha Philosophy] என்கின்ற சமுதாயத் தத்துவம் [The social philosophy] அரசியல் தத்துவம்[The political philosophy] பொருளாதாரத் தத்துவம் [The Economical philosophy] நம்மால் ஏட்டறிவாகவும், பட்டறிவாகவும் [Both theoretically and practically] ஓர் இயக்க வடிவமாக [In the form of a Movement] வழங்கப்பட்டு வருகிறது எனவே, நமது இந்து மறுமலர்ச்சி இயக்கம் [The social Renaissance Movement] ஒன்றுதான் இந்தியத் துணைக்கண்டத்திற்கும் இந்த மண்ணுலகுக்கும் வளமான வருங்காலத்தை விளைவித்து கொடுக்கும் ஆற்றலுடையது. இப்பேருண்மையினை நம்மவர்கள் நன்கு புரிந்தும் புரிய வைத்தும் செயல்படுவதைப் பொறுத்துத்தான் நமது வளவளர்ச்சியும், வலிவுச் செழுச்சியும் இருக்கிறது. இதற்காக நம்மவர்கள் இது வரை வெளிவந்துள்ள குருதேவர் அறிக்கைகளை மட்டுமாவது அடிக்கடி திருப்பி திருப்பி நன்கு படித்து கொள்கைத் தெளிவு பெற வேண்டும்.
3. நண்ப! ஒரு காலத்தில் மதம்தான் அரசியல், கலை,இலக்கியம், மருத்துவம், தொழில், நீதி, சமுதாயச் சட்டதிட்டக் கட்டுப்பாட்டு முறைகள் முதலிய அனைத்துக்கும் தலைமை தாங்கி வழி நடத்தியது. ஆனால், இந்த மதம் கடுமையான ஒழுங்கு, ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம், மனிதத்தன்மை ... முதலிய பண்பு நலன்களைச் செயலாக்கியது. எனவே இதனுடைய பிடியிலிருந்து, நேரடியான ஆட்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள அல்லது முறித்துக் கொள்ள அல்லது விலகியோடிட மேற்படி அனைத்துத் துறைகளும் மிகப் பெரிய போராட்டங்களையும் போர்களையும் செய்ய நேரிட்டது. ஆனால், அவைகள் வெற்றி பெற முடியவில்லை. என்வே அவைகள் மதத்தலைவர்களின் மீதும், மதத் தத்துவங்களின் மீதும், மத வரலாறுகளின் மீதும், மத இலக்கியங்களின் மீதும், மதச் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளின் மீதும், நடைமுறைகளின் மீதும், சித்தாந்தங்களின் மீதும், சடங்கியல்கள் மீதும், மத நாயகர்களாக விளங்கிடும் அனைத்து வகையான கடவுள்களின் மீதும், கண்மூடித்தனமான தாக்குதல்களை நிகழ்த்த ஆரம்பித்தன.
4. நண்ப, இங்குதான், நாம் மிகமிக நிதானமாகவும், பொறுமையாகவும், பொறுப்பாகவும் அமைதியாகவும், அடக்கமாகவும், மிகமிகத் தெளிவாகவும் கருத்துக்களையும் செய்திகளையும் விளக்கி வழங்கிடல் வேண்டும். ஏனெனில் ஈவிரக்கமின்றி, நீதிநேர்மையின்றி...அரசியல், கலை, இலக்கியம் சமுதாயம்...முதலிய அனைத்துத் துறையினரும் மதத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் இழித்தும் பழித்தும் கேவலப்படுத்தியும் சிதைத்தும் சீரழித்தும் முறையற்ற குறுக்கு வழிப் போரைத் தொடர்ந்து நிகழ்த்திட்டார்கள். அதன் விளைவுதான், மதம் வீழ்ச்சியுற்றது, இகழ்ச்சியுற்றது, தாழ்ச்சியுற்றது, செல்வாக்கிழந்தது, செயல் நலம் குன்றியது. மற்ற துறைகள் மதத்தைக் கேவலப் படுத்தியும் இழிவுப்படுத்தியும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வரலாயின. இதனால் மதத்தின் பிடியிலிருந்து அரசியல்வாதிகளும், சமுதாயவாதிகளும், இலக்கியவாதிகளும், கலையுலகவாதிகளும், மதத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றார்கள். இந்த விடுதலையால் இவர்கள் எல்லாவிதமான தவறுகளையும் நியாயப்படுத்தி விட்டார்கள். அதாவது களவு, கொள்ளை, காமம், நிர்வாக ஊழல், கள்ளச்சந்தை, (இலஞ்சம்) கையூட்டு முதலிய அனைத்தையும் தாங்கள் செய்யலாம், ஆனால் மதவாதி செய்யக் கூடாது என்பது போன்ற மாயா வாதத்தை உருவாக்கி விட்டார்கள். இதன்படிதான் இன்றைக்கும் மதவாதிகளைப்பற்றி மட்டுமே போலிகள், முறைகேடர்கள் என்ற குற்றச் சாட்டிற்குள்ளாக்கி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் எல்லாத் துறையினருமே கடவுள்களையும், புராண இதிகாசங்களையும், சாத்திறச் சம்பிறதாயங்களையும், சடங்குகளையும், ஒருசில மதவாதிகளின் சாதாரணத் தவறுகளையும் மிகமிகப் பெரிய அளவில் கேவலப்படுத்தியும் கண்மூடித்தனமாகத் தாக்கி விமர்சித்தும்தான் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அதாவது அரசியல்துறையிலோ கலைத்துறையிலோ உள்ள தலைவர்கள் கொலை, கொள்ளை கற்பழிப்பு, கள்ளச்சந்தை ஊழல் (இலஞ்சம்) கையூட்டு முதலிய எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்தாலும் அவற்றைப் பெரிதுபடுத்தாமல் அவைகளை எதிர்பாராமல் நிகழ்ந்தவைகளாகவும், தவிர்க்க முடியாதவைகளாகவும் விமர்சனம் செய்து நியாயப்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுவாக மக்களும் மதத் துறையினரைத் தவிர மற்ற அனைத்துத் துறையினரும் எல்லாவிதமான தவறுகளையும் செய்யலாம். அது குற்றமில்லை என எண்ணுகின்ற மனநிலையைப் பெற்றுவிட்டார்கள். எனவேதான், இன்றைக்கும் அனைத்துத் துறையிரும் தங்களை மதமறுப்பாளர்கள், வெறுப்பாளர்கள், எதிர்ப்பாளர்கள், சீர்திருத்தவாதிகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவுவாதிகள் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணுங்கருத்துமாய் இருக்கிறார்கள்.
அதாவது, மதம் கூறுவது போல் தாங்கள் ஒழுக்கமாகவோ, நீதியாகவோ, நேர்மையாகவோ வாழ வேண்டியது அவசியமில்லை என்பதாகத் தங்களுக்கு ஒரு புதிய செல்வாக்கை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். இதன் மூலம் இவர்கள் தங்களுக்கு மதத்தைக் கண்டிக்கவோ, திருத்தவோ உரிமையுண்டு. ஆனால், மதத் தத்துவத்திற்கும், மதத் தலைவர்களுக்கும் தங்களைக் கண்டிக்க உரிமையில்லை! இல்லை! இல்லை! என்று விளம்பரப்படுத்திக் கொண்டுள்ளார்கள். எனவேதான், அரசியல் வாதிகளும், சமுதாய வாதிகளும் என்றென்றும் கோயில் நிர்வாகங்களும், மடங்களின் நிர்வாகங்களும், மதத்தின் பெயரால் உள்ள அனைத்து நிர்வாகங்களும் தங்களுக்குக் கீழேயே, தங்களுக்கு அடங்கியனவாக இருக்க வேண்டும் என்று அனைத்து வகையான சட்ட திட்டச் செயல் கட்டுபாடுகளையும் வளர்த்து வருகிறார்கள். இந்த மாபெரும் சதித்திட்டத்திலிருந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்குரிய அறிவு, ஆற்றல், செயல் திறம், தத்துவ உரம், கொள்கை வலிவு, குறிக்கோள் தெளிவு உலக அளவில் நம்மிடம்தான் இருக்கின்றது, இருக்கின்றது, இருக்கின்றது.
"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."
"...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."