[குருதேவர் அறிக்கை 13இலிருந்து]
அன்புச் சேவுக!
மிகப் பெரிய கடிய கொடிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ஆரிய மாயை மிகு சூழ்ச்சிகள் எனும் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் தமிழினத்தைக் காப்பாற்றும் பணி எம் தந்தையால் நேரடியாகத் துவக்கப்பட்டது. ஆனால், அவரோ, கரையில் நின்றபடி என்னையனுப்பி மூழ்கும் எமது தாயினமாம் தமிழினத்தைக் காப்பாற்ற அனுப்பி விட்டார்; நீருள் மூழ்குகிறவனோ என்னையும் சேர்த்து நீருக்குள் மூழ்கடிக்கவே முதலைப்பிடி போட்டு விட்டான். என்ன செய்வது' எப்படியும் நான் பிறந்த இனத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் பெருவீரம் காட்டி ஈடுபட்டு விட்டேன்.
'... பதினெண் சித்தர்கள் படைத்த இந்து மதத்தை விளக்கும் மாபெரும் சாதனங்களே சிவன், திருமால், பிறமண், இந்திரன், தேவேந்திரன், இயமன், முருகன், இராமன், கண்ணன் ... முதலியோரின் வரலாறுகள். ஆனால், ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியால், பொய்யால், புளுகால், கற்பனையால், மாயா வாதத்தால், ... மேற்கூறிய அனைத்து வரலாறுகளையும், தமிழர்களே வெறுக்கவும், மறுக்கவும், எதிர்க்கவும், நகைக்கவும், பகைக்கவும், பழிக்கவும், ... செய்யுமாறு செய்திட்டனர். இம்மாபெரும் சதியால் இந்து மதத்தின் ஆணி வேரான பெண் வழிச் சித்திப் பூசை, கன்னிப் பூசை, பாவைப்பூசை, மங்கைப்பூசை, நங்கைப்பூசை, குமரிப்பூசை ... எனும் பூசைகள் அனைத்தும் கேலிக்கும், கிண்டலுக்கும், கேவலத்துக்கும் உரியவையாக்கப்பட்டுத் தமிழர்கள் அருளுலகச் சித்திகளை நாடவே முடியாத நிலைகளை உருவாக்கி விட்டனர் ஆரியர்.
இம்மாபெரும் ஆரிய வெற்றியால் வீழ்ச்சி பெற்ற தமிழர் அருளுலக விழிச்சியோ! எழிச்சியோ! செழிச்சியோ! ... பெறவே முடியாமல் போய்விட்டது. பாரதப் போரை வென்ற கண்ணன் தன் வாழ்வில் சந்தித்த பெண்களை யெல்லாம் பெண்டாட்டியாக்கிக் கொண்டானென்று கூறி அவனைத் தமிழர் தூற்றிப் பழித்துத் துறக்கச் செய்தனர் ஆரியர். ஆனால், உண்மையென்ன' .........
கண்ணன் பகதத்தன் பட்டணத்திலிருந்து கொணர்ந்த பதினோறு ஆயிரத்து அறுநூறு பெண்களையும்; நாகாசுரன் பட்டணத்திலிருந்து கொணர்ந்த பதினாறாயிரம் பெண்களையும்; முராசுரனின் பத்துப் பெண்களையும்; இராதை, உருக்குமணி, சாம்பவதி, சத்தியபாமா, கானந்தி, மித்திரவிந்தை, சத்தியவதி, பத்திரை, இலக்குமணை, நப்பின்னை எனும் பத்துப் பெண்களையும் ஆக மொத்தம் [11,600 + 16,000 + 10 + 10 = 27,620] இருபத்தேழாயிரத்து அறுநூற்று இருபது பெண்களை மணந்து போக இன்பம் துய்த்துப் போகியாகவும்; ஒன்பது கோடிக் கோபியர்களைத் தழுவி இட்டும் தொட்டும் சுட்டியும் அருளின்பம் வழங்கி யோகியாகவும்; பஞ்ச பாண்டவர், வீடுமர், வியாசர் முதலிய எண்ணாயிரவரும்; பாரதப் பெரும் போரின் பதினெட்டுக் கோடி அக்குரோணி சேனையினரும் தன்னைக் கண்டாலும், கருத்தில் நினைத்தாலும் மோகித்து ஞான அமுதம் பருகி மயங்குமாறு செய்து மோகியாகவும் வாழ்ந்தான். இப்படிப்பட்ட இவனைப் புரியமுடியாத துரியோதனாதிகள் நூறு பேர், சிசுபாலன் குடும்பத்தார் நூறுபேர் ..... என்று பல ஆயிரம் நூற்றுவர்கள் தூற்றினார்கள்! தூற்றினார்கள்! தூற்றினார்கள்! ஆனாலும், இவன் சந்திர குலத்துக்குரிய ஏந்தரீக தாந்தரீகப் பூசைகளைச் செய்து ஏழுபருவத்துப் பாவையரும் தாயாக, தாரமாக, தானீன்ற மகளாக உயர்நிலை நின்று வழங்கிய சத்தியாலேயே பாரதப் போர் முடித்தான்.
இவன் கடமை வீரன் என்பதால் பஞ்ச பாண்டவர்க்கு நீதி கேட்கும் போரைப் பார் முழுதுமுள்ள வீரர்கள் திரண்டு போரிடும் பேரழிவுக்குரிய பாரதப் போராக [பார் + அதம் + போர் -> இம்மண்ணுலகில் மிகப்பெரிய அழிவை நல்கிய போர்] நிகழ்த்தினான். இதற்காக இவன் தனது திருத்தோற்ற இறையாற்றல்கள் அனைத்தையும் செலவிட்டான். ஆனால், தங்கை சுமத்திரை அபிமன்யுக்காகவும், திரௌபதி தானீன்ற இளம் பஞ்சபாண்டவர்க்காகவும், நாக கன்னி தன் மகன் அரவானுக்காகவும், இருபத்தேழாயிரத்து அறுநூற்று இருபது மனைவியரும் தங்களுக்குக் கண்ணனின் முழு அன்பு கிடைக்காத ஏமாற்றத்தினாலும், கர்ணன் தன்னழிவுக்காகவும், காந்தாரியும் திருதராட்டினரும் தங்கள் மக்களின் மரணத்துக்காகவும், அத்திரி மகள் சித்திரை தன் மகன் சீயரதனும் கணவன் வித்தைச் சித்திரனும் கொலையுண்டதற்காகவும், ........ சாபம் கொடுத்ததால் துன்புற்று மனம் வருந்தி முப்பத்தாறு ஆண்டுகள் பாரதப் போருக்குப் பிறகு வாழ்ந்து தனது ஏட்டறிவையும், பட்டறிவையும், ஞானத்தையும், ........ கதையாக, கவிதையாக [காவியமாக], கீதையாக [இசைப் பாடலாக]ப் பதினெட்டு வியாசர்களையும் பலநூறு பைந்தமிழ்ப் புலவர்களையும் துணையாகக் கொண்டு எழுதி முடித்தான். ஆனால், அவன் பைந்தமிழில் எழுதியவைகளும், அவனே தமிழினத்தின் சந்திர குலக் குருவாக வாழ்ந்தான் என்ற பேருண்மையும் ... ஆரியரால் சிதைத்துச் சீரழிக்கப்பட்டு மங்கி மறையச் செய்யப்பட்டு விட்டன.
இவற்றை யெல்லாம் எண்ணியே பதினெண் சித்தர் பீடாதிபதிகள் 'பெண்ணே அருளுலகின் கண்', 'மங்கை மாதந்தோறும் மலரும் மலர்', 'பெண்ணின்பமே பேரின்பம்', 'பெண் வழிச் சேரும் வாழ்வே மோக யோக போக வாழ்வு', 'பெண் அருளுலக வழிகாட்டி', 'பெண்ணை மறுத்தோ வெறுத்தோ பெறப்போகும் சித்தி ஏதுமில்லை', 'பெண்ணை வழிபட்டே சூரியகுலத்தோர் எட்டு சித்திப் பூசைகளையும் சந்திர குலத்தார் பத்துச் சித்திப் பூசைகளையும் செய்யும் மரபு தோன்றிற்று', ........ ஆனால் 'எல்லாப் பெண்களும் பூசைக்குப் பயன்பட மாட்டார்கள்', 'வாக்கு, மனம், சிந்தை, விதி, ஊழெனும் ஐந்தும் சித்திக்கும் பூவையரே பூசைக்கு வந்த மலர்', 'கோடிக்கணக்கான கன்னியரில் தேடிச் சிலரையே கண்டு பூசை செய்தே சித்தியுற முடியும்', ...... என்ற பேருண்மையெல்லாம் மறந்து கடமை வீரன் கண்ணன் காமக் களியாட்டக் கண்ணனாக வசை பாடப்பட்டதால்; பாரதப் போர் வென்றும் அவன் நெஞ்ச நெருப்பு அணையாமல் கனன்று உருகிப் புனலாக ஓடிற்று அன்று. கண்ணனின் கடமை மனம் அனல் புனலாயிற்று என்பதை எண்ணியாவது அருளுலக இருளகற்றும் திருவிழாத் தத்துவத்தைப் பொறுப்போடும் பொறுமையோடும் புரிய முற்படும் அறிவாளர்களை உருவாக்கியே அருட்படை திரட்ட வேண்டும்.
படையில் யானை, குதிரை, தேர், காலட்படை என நான்கு பெரும் பிரிவினர் உண்டு என்பதல்லாமல்; ஆயுதமேந்தியவர்கள் எல்லாம் வீரர்களாகவோ; படையில் சேரும் அனைவருமே படைத் தளபதிகளாகவோ மாறுவதில்லை; அவரவர் தரம், உரம், திரம், தீரம், வீரம், பாரம்பரியம், பக்குவம், உண்மை, நுண்மை, திண்மை, ...... முதலியவைகளுக்கேற்பவே வீரவாழ்வும், வெற்றியும் பெறுவர். அதுபோலவே, அருளுலகப் பேருண்மைகளை அனைவருமே சம அளவு தெரியவோ, புரியவோ, செயலாக்கவோ! ....... முடியாது! முடியாது! முடியாது! என்பதை எண்ணியே அருட்படை உருவாக்க வேண்டும்...' என்ற பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் கூறிய பாரம்பரியச் செய்தியையே எனது குருநிலை விளக்கச் செய்தியாக 1985-ஆம் ஆண்டு முதல் அறிக்கையில் விடுக்கின்றேன்.
அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்
"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."
"...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."