[குருதேவர் அறிக்கை 11இலிருந்து]
அன்புச் சேவுக!
உரிமையை நிலைநாட்டிட ஆயுதங்களைத் தாங்கி புறப்படுகிறவன்; எண்ணற்றோர் உயிருக்கு முடிவையும், உடலுக்கு மாறா வடுவுடைய விழுப்புண்களையும் நல்குவதோடு வெற்றித் திருமகள் அளித்திடும் வீரப்புண்கள் எனும் முத்திரைகளைப் பெற்றுத் தன்னை வீர வரலாற்று மாளிகைக்குள் நுழையும் உரிமை பெற்றவனாக்கிக் கொள்கின்றான்.
இறவாத தத்துவங்களை ஈன்றெடுப்பேன், உலகம் மறவாத அறிவுலக வரலாறு எழுதுவேன், வருங்காலம் என்றென்றும் கண்டு களிக்கக் கருத்து வளர்ச்சி மிக்க கலைக் கருவூலம் அமைப்பேன். மேலும், தாழ்த்தப் பட்டவர்களை உயர்த்துவேன், வீழ்த்தப் பட்டவர்களை எழுச்சி பெறச் செய்வேன், மூடி மறைக்கப் பட்ட பேருண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து வெளிக் கொணருவேன், கோழையை வீரனாக்குவேன், எங்கும் எதிலும் இருள் படியாப் பேரொளியை ஏற்றி வைப்பேன், 'கண்டவர் விண்டார்' என்ற புதுப் பெருமையைப் படைப்பேன், 'கடைவிரித்தேன் நல்ல வியாபாரம் நடந்தது' என்ற அடைய முடியாப் பெருநிலையை அடைவேன்; என்மொழி, என் இனம், என் நாடு என்பவை எனது மூன்று நாடித் துடிப்பு. நான் எடுக்கும் முயற்சிகளும் பிறர் தடுக்கும் முயற்சிகளும் வீரவரலாற்றின் படிக்கட்டுகள் ..... என்று சூளுரைத்து வாளின்றி வேலின்றிப் போர் புரியப் புறப்பட்டவன் நெஞ்சமும், சிந்தையும், எண்ணற்ற வீரப்புண்களைப் பெற்று வடுக்கள் மிகுந்த திருவுருவைத்தான் பெற்றிட முடியும்.
கண்ணுக்கு விருந்தாகாது வீர உடல்; கருத்துக்கும் நாட்டு நல்வாழ்வுக்கும் விருந்தாகுதலே வீரவுடல். நெடிய, பெரிய பயணங்கள், கடுமையும் கொடுமையும் நிறைந்த அநுபவங்கள். கடந்த காலம் இருளும், இன்னலும், இழப்பும், இழிவும், அழிவும், பழியும், வெடிப்பும், நொடிப்பும் மிக்கவை. நாற்றமடிக்கும் குப்பையால் நறுமணமிக்க மலர்களையும், சுவைமிக்க கனிகளையும் பெறலாம். மண்வாகுக்கேற்பவே பயிர் செய்யலாம்.
அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்
"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."
"...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."