[குருதேவர் அறிக்கை 9இலிருந்து]
அன்புச் சேவுக!
எம் வாழ்க்கை 'ஒரு தெய்வீகச் சோதனையே' [My life is the Test of Divinity]. யாம் நஞ்சுண்ட மேனியனாகவே வளர்க்கப் பட்டும், இம்மாஞாலம் முழுதும் பயிற்சி, முயற்சிகளில் தேர்ச்சி பெற்று முதிர்ச்சியுற்றும்; அரசயோகியாக, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானமாக இந்துமதத் தந்தையாக, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறாராக, பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகச் செயல்பட்டும் இந்துக்களை ஒற்றுமைப்படுத்தவோ, ஒருமைப்பாடுபெறவோ, ஆட்சியுரிமையை பெறச் செய்யவோ ...... முடியவில்லை ............. இருந்தாலும், யாம், மேற்படி சாதனைகளுக்காக முயலவில்லை என்று எவரும் குறை கூறிடவே இயலாது.
இந்து மதம், பிறந்த நாட்டிலேயே மற்ற மதங்களால் வேட்டையாடப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும், தொடர்ந்து அரசியல்வாதிகளின் சுயநல வெறியால் இந்துமதத்துக்கு விரோதங்களும் துரோகங்களும் நிகழ்ந்தே வருகின்றன. இவற்றை நிலையாகத் தடுத்தும், முழுமையாகத் தீர்த்தும் இந்து மதத்தைக் காத்து இந்தியாவைச் சிதையாமல் காப்பாற்ற வேண்டுமேயானால் இந்திய விடுதலை வரலாற்றின் தத்துவ நாயகர்களாக விளங்கிய திரு எம். என். ராய், திரு எம். பி. பிள்ளை என்ற இருவரும் விட்டுச் சென்றுள்ள வரலாற்றுக் குறிப்புக்களை வெளியிட்டேயாக வேண்டும். ஆனால், இந்து மதப் பிறப்பிடமான தமிழகமே இன்னும் தன்னுணர்வு, இன ஒற்றுமை, மொழிப்பற்று, மதநம்பிக்கை ....... பெறாமலிருக்கிறதே!'! .........
நண்ப! கடந்த பன்னிரண்டாண்டுகளாக யாம் மந்திரவாதியாக, சோதிடராக, குறிகாரராக, மருளாளியாக, அருளாளியாக, பூசாறியாக, மருத்துவராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, எழுத்தாளராக, ....... எப்படி யெப்படியெல்லாமோ செயல்பட்டும் கூடத் தன்னலக்காரர்கள், குறுகிய வெறியர்கள், ...... தங்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு முதலாளித்துவப் போக்கில் ஒதுங்கி விட்டனர். எனவே, நாம், இம்மண்ணுலகுக்குத் தனி மனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு, ..... முதலிய அனைத்தையும் 'இந்து மதம்' எனும் 'சமூக விஞ்ஞானத்தால்' [The Induism is a Social Philosophy] வழங்கிய பதினெண் சித்தர்களின் நேரடி உரிமை வாரிசு என்ற முறையில் செயல்பட்டேயாக வேண்டும்.
இதற்காக, இந்திய விடுதலை வரலாறு, விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் வரலாறு என்ற இரண்டையும் கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை, சித்தர் காகபுசுண்டர் ம. பழனிச்சாமி பிள்ளை, உலகக் கம்யூனிச இயக்கம் நிறுவிய அறிவியல் மேதை எம்.என். ராய், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ..... முதலியோர் எழுதிய வாசகங்களையும், எழுதாக் கிளவிகளாக விடுத்துச் சென்ற வாக்குகளையும் முடிந்தவரை அடுத்தடுத்து வெளியிட்டேயாக வேண்டும். இந்த நாட்டுப் பதிப்பகங்களையும், அறிவுலகத்தாரையும் நம்பிப் பயனில்லை.
யாம் எமது தாயகத்தில் ஓர் அன்னியனாகவே வாழ நேரிட்டிருப்பது தாங்க முடியாத வேதனையே! நமது ஆர்வலர்களை ஆதரவாளர்களாக்க வேண்டியதே நமது உடனடிக் கடமை.
அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்
இந்துமதத் தந்தை
"... எமது பணிகளுக்குரிய கொள்கை, செயல்திட்டம், குறிக்கோள் முதலியவைகளை எழுதியும், அச்சிட்டும், பேசியும், ஆயிரமாயிரம் இளைஞர் மூலம் செயலாக்கியும் கூடப் பிறரின் கேலியும், கிண்டலும், ஏளனமும், எதிர்ப்பும், ஒதுக்கலும், பதுக்கலும், நீக்கலும், இருட்டடிப்பும்தானே பரிசாகக் கிடைக்கின்றன! ..."
"...யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம்...."