வரலாற்றுப் போக்கில் தனித்தனியாக தமிழினத்துக்கு, மொழிக்கு, மதத்துக்குத் தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால், இந்த மூன்று துறைகளுக்குமே சேர்ந்து ஒட்டுமொத்தமாகத் தலைமை தாங்கக் கூடிய தலைவராகப் பதினெண்சித்தர் பீடாதிபதிகளைத் தவிர வேறு எவரும் தோன்றியதில்லை. எனவே, நம் காலத்தில் தோன்றியிருக்கும் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குவலய குருபீடம், பரபிறம்மம், நிறையக்ஞர், கருவறை மூலவர்களின் அம்மையப்பர் ... குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறாராகிய குருதேவர் அவர்களை அனைத்துத் தமிழர்களும் தெரிந்து, புரிந்து, உணர்ந்து, நம்பி, அவரது தலைமையில் ஒன்றுதிரண்டு, ஒற்றுமைப்பட்டு, ஒருமைப்பட்டுச் செயல்படத் தயாராக வேண்டும். இசுரவேலர்களை விடுவிக்க வந்த மோசே போலத் தமிழர்களை விடுவிக்க வந்திருப்பவரே நமது குருதேவர்.
உலகம் முழுவதுமுள்ள அருளுலகப் பொருளுலக இருள்களையும், இன்னல்களையும் அகற்றிடத் தோன்றுபவர்களே பதினெண்சித்தர் பீடாதிபதிகள். எனவேதான், இவர்கள் சாதி, மத, இன, மொழி, நாட்டு வேறுபாடுகள் இல்லாமல் உலக மக்களின் அமைதிக்கும், நிம்மதிக்கும், நிறைவுக்கும், மகிழ்வுக்கும், சமாதானச் சக வாழ்விற்கும் உழைக்கக் கூடிய ஏட்டுலகத் தத்துவங்களையும் நாட்டு நடப்பியலுக்குரிய செயல் சித்தாந்தங்களையும் வழங்குகிறார்கள்.
‘இந்து’ என்ற ஒரு சொல்தான் நேரடியாக ‘மனிதம்’ என்னும் பொருளில் அடங்கக் கூடிய வாழ்விற்குரிய அன்பு, பற்று, பாசம், கனிவு, இனிமை, மென்மை, நட்பு, தோழமை, உறவு, ... முதலிய அனைத்தையும் வளத்தோடும், வாலிப்போடும், வலிவோடும், பொலிவோடும் போற்றிப் பேணி வளர்க்கும் ஆற்றலைத் தரவல்லது. இது எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் குறிக்காது. இது பேரழகும் கருத்தாழமும் உடைய பழந்தமிழ்ச் சொல்லாகும். எனவே, இந்து மறுமலர்ச்சி இயக்கம் என்றால் ‘உலக மானுட மறுமலர்ச்சி இயக்கம்’ என்று பொருள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பேருண்மைகளை விளக்கி நமது கோயில்களில் நிகழக் கூடிய அன்றாடப் பூசைகளின் முடிவிலும், விழாக்களின் துவக்கக் காலங்களிலும் கலந்துரையாடல்கள், விரிவுரைகள், பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் ... முதலியவை நிகழ்த்தப்பட்டேயாக வேண்டும். இதற்குப் பாடுபட தமிழினத்து இளைஞர்களும், பெரியோர்களும்தான் முன்வர வேண்டும். ஏனென்றால், நடுத்தர வயதினர் அனைவரும் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களில் தங்களுடைய கண்ணையும், கருத்தையும், உழைப்பையும் செலவிட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். எனவேதான், இந்தத் ‘தமிழின மொழி மத விடுதலை இயக்கங்கள்’ தமிழினத்து இளைஞர்களையும், பெரியோர்களையும் மட்டும் அதிக அளவில் உறுப்பினராக்கிட நேரடியாகச் சந்திக்க முயலுகின்றன.
உலக அளவில் மானுட மறுமலர்ச்சி இயக்கமாக நமது ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’தான் செயல்பட முடியும். ஏனென்றால், தமிழர்களின் மெய்யான இந்துமதம்தான் எந்தவிதமான வெறியும் இல்லாமல் ஒரு சமுதாய நெறியாக இருக்கிறது. மேலும், உலக மதங்களுக்கு மூலமாகவும், முதலாகவும், தாயாகவும், கருவாகவும் இருக்கின்ற தமிழருடைய சித்தர்நெறி எனப்படும் சீவநெறியான இந்துமதத்தின் அருளுலக வாரிசுகளாக, விதைமுதலாக, கருவறை மூலவர்களாக, நாற்றுப் பண்ணைகளாக, விதைப் பண்ணைகளாக இருப்பவர்கள் தமிழர்கள்தான், தமிழர்கள்தான், தமிழர்கள்தான்.
எனவே, தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டெயாக வேண்டும்! தமிழர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டேயாக வேண்டும்! தமிழர்கள் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் செயல்பட்டேயாக வேண்டும்!
அம் மாபெரும் முயற்சியைத்தான் ‘இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின்’ கீழ் செயல்படும் ‘தமிழின மொழி மத விடுதலை இயக்கங்கள்’ மேற்கொண்டிருக்கின்றன. எனவே, இந்தத் தமிழின மொழி மத விடுதலை இயக்கங்களின் இந்தச் சுருங்கிய வடிவக் கொள்கை விளக்கக் குறிப்பேட்டுப் புத்தகத்தை அனைவரும் ஆர்வத்துடன் படித்தும், பிறருக்குப் படித்துக் காட்டியும் செயல்பட வேண்டுமென்று தலைமைப்பீடப் பணியாளர்களும், தலைமைப்பீடச் செயலகப் பணியாளர்களும், இ.ம.இ.; அ.வி.தி.யின் மண்டல நிர்வாகக் குழுவினர்களும், அ.வி.தி. செயல் வீரர்களும், இ.ம.இ.யின் நிறுவன நிர்வாகத்தைச் சேர்ந்த அனைவரும் இருகை கூப்பி இந்த வேண்டுகோளை விடுத்துக் கொள்கிறோம்.
வெல்க அருளாட்சி அமைப்புப்பணி!
ஓங்குக உலக ஒற்றுமை!
நிலவட்டும் உலகச் சமாதானம்!
பயிராகட்டும் உலகச் சமத்துவம்!
நிறைவு பெறட்டும் உலக அமைதிப்பணி!