‘கருவூரார்’ என்றால் ‘கருவூர்’ என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்று பொருள்.
‘சித்தர் கருவூரார்’ என்ற பெயரிலும் ‘கருவூர் சித்தர்’ என்ற பெயரிலும் வாழ்ந்திட்ட, வாழ்ந்திடும் சித்தர்கள் பலர் உள்ளார்கள். சிலரின் இலக்கியங்களும், வரலாறுகளும் ஓரளவு நாடறிய உள்ளன.
பதினெண் சித்தர்களில் 'பிறவாமை பெற்றவர்கள்' 'மீண்டும் கருவில் ஊறமாட்டார்கள்’ என்ற பொருளில் ‘கருவூறார் என்று குறிக்கப் படுகின்றனர். இவர்களன்றிச் சித்தர்களின் நூல்களில் ‘பிறவாயாக்கைப் பெரியோர்கள்’, ‘இறவாயாக்கைப் பெரியோர்கள்’, ‘பிறப்பிறப்பற்ற ஆன்றோர்’, ‘சாவிறந்த சான்றோர்’, ‘சாகாக்கலை வல்லோர்’, ‘பிறவிப் பெருங்கடல் கடந்தோர்’, ‘மரணமிலாப் பெருவாழ்வு கண்டோர்’, ‘மரணமிலாப் பெருவாழ்வு பெற்றோர்’, ‘மரணத்தை வென்றோர்’... என்று பல சொற்கள் இருக்கின்றன. ஆனால், ‘கருவூறார் என்ற சொல் ஆட்சியில் இல்லை. அதாவது, பதினெண்சித்தர் பீடாதிபதிகளாய் உள்ளவர்களே சிறப்பாகக் ‘கருவூறார்’ என்று குறிக்கப்படும் மரபு இருந்து வருகிறது.
இதுவன்றிக் கருவூறார்களின் விந்துவழி வாரிசுகளில் ‘பிறவாமைச் சித்தி’ பெற்றவர்கள் மட்டும் தங்களைக் ‘கருவூறார் என்று குறிக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.
அனாதிக் காலத்தின் இறுதியில், இந்துமதத்துக்கென அரசாங்கத்தையும், இந்துமதத்துக்குரிய ஆட்சிமொழியான பதினெண் சித்தர்களின் தாய்மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியின் வளவளர்ச்சிக்கெனத் தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கும் திட்டம் செய்யப்பட்டது. அதன் பயனாகப் பஃறுளியாற்றங்கரையில் தொன்மதுரை உருவாயிற்று. அங்கு, பதினெண் சித்தர்க்ளின் தலைவரான 'சிவபெருமான்' தமிழின, மொழி, மதக் காப்பு அரசாக உருவாக்கப்பட்ட பாண்டிய அரசின் முதல் மன்னனாக முடிசூடினார். அவரே, தமிழ்ச் சங்கத்துக்கும் தலைவரானார்.
இச்சிவபெருமான், "பிறவாயாக்கைப் பெரியோன்" என்ற நிலைபெற்றவர். அதாவது, இவர், இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்; மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார். இவர், அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்திய போதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை. எனவே, 'கருவூறார்' என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிட்டார். ஆனால், இந்துமதத்தில் மாயோன், நெடியோன், திருமால், பெருமால் என்று குறிக்கப்படும் காத்தற் கடவுள் பத்து முறை திருத்தோற்றம் (பிறப்பெடுத்தல் = அவதாரம்) செய்பவராக உள்ளார். இவர், 'கரு'வைத் தமது ஊராகக் கொண்டிட்டார். எனவே, இவர் 'கருவூரார்' என்றழைக்கப்படும் மரபைப் பெற்றிட்டார்.