(i) அருளுலகத்தைப் பொறுத்தவரை 'ஒரே கடவுள்' என்று சொல்வது மனிதனுடைய தவறான கற்பனை. இது மனிதனுடைய வியக்கத் தக்க வினோதமான ஆசை, அதிசயிக்கத் தக்க விருப்பம்.
(ii) கடவுள் என்பவருக்கு எல்லா மொழிகளும் தெரியும் என்று நினைப்பதும், நம்புவதும் மிகப் பெரிய தவறு. எந்த மொழியைச் சேர்ந்த மனிதன் கடவுளாகிறானோ அவனுக்கு அந்த மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. அவன் கடவுளாகவே இருந்தாலும் இதுதான் உண்மை.
(iii) மனிதர்கள் விளையாட்டுப் பருவத்திலுள்ள சிறுவர்கள் போலக் கற்பனையாகக் 'கடவுளால் எல்லாம் செய்ய முடியும், கடவுளுக்கு எல்லாம் தெரியும்' என்று கருதுவது மாபெரும் தவறு.
(iv) அண்டபேரண்டங்களிலிருந்து வந்திருக்கக் கூடிய வழிபடு நிலையினர்கள், அல்லது சித்தர்கள் கடவுளாக வணங்கப் பட்டாலும் சரி, அவரவருடைய ஏட்டறிவுக்கும், பட்டறிவுக்கும் ஏற்பத்தான் அவர்களுக்குச் செய்திகள் தெரிந்திருக்கும்; அவர்களால் எதையும் செய்ய முடியும். அதாவது மனிதர்களிடையே அறிவிலும், ஆற்றலிலும், மற்றச் செயல்பாடுகளிலும் எப்படி வேறுபாடுகள் நிறைய இருக்கின்றனவோ அது போலத்தான் கடவுள்களுக்கு இடையிலும் அறிவிலும், ஆற்றலிலும், செயல் திறமைகளிலும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர்.
இந்தப் பேருண்மைகளின் அடிப்படையில்தான், பதினெண்சித்தர்கள் சித்தர் நெறியெனும் சீவநெறியான இந்து மதத்தைப் படைத்திருக்கிறார்கள். அதாவது எந்தத் தனிமனிதனாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு குழுவினராக இருந்தாலும் சரி, அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அவர்கள் தாங்கள் விரும்பும் கடவுளர்களின் கோயில்களுக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் அவர்கள் தங்கள் தங்களுக்குரிய இல்லறத் தெய்வம், குடும்ப தெய்வம், உறவினர்கள் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், தெருவினர் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், ஊரார் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், குறிப்பிட்ட வட்டாரம் அல்லது நாடு முழுதும் சேர்ந்து கொண்டாடும் தெய்வம் என்று தெய்வங்களைப் பலவகை நிலைக்குரியவர்களாக வகுத்துப் பிரித்தமைத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல மனிதர்கள் தங்கள் தங்களின் தாய்மொழியின் அடிப்படையில்தான் தங்களுடைய வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் தாங்கள் வழிபடக் கூடிய கடவுள்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், நாட்டின் எல்லைக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, சொந்த இடம் விட்டு நெடுந்தொலைவு சென்று வீர மரணத்தாலோ, மிகச் சிறந்த பத்தி, சத்தி, சித்தி, முத்திகளாலே கடவுளாக மாறியவர்கள் இருப்பார்களானால் அவரைச் சேர்ந்தவர்கள் நெடுந்தொலைவுள்ள இடத்திற்குச் சென்று பூசை செய்து அங்கிருந்து பிடிமண் எடுப்பார்கள். அதாவது, மூன்று கைப்பிடி மண் எடுத்து ஒரு துணியில் கட்டிப் புதிய ஓலைப் பெட்டியில் வைத்திருப்பார்கள். முறைப்படிப் புனிதக் கலயம்* தயாரித்து [*கலயம் = வழக்காற்றில் இதனைக் கலசம், கலயம் அல்லது கரகம் அல்லது கிரகம் தயாரித்தல் என்று சொல்லுவார்கள்] இரண்டையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து ஊர் வரை வாசனைப் பூவை வழி நெடுகப் போட்டுக் கொண்டு கடவுள் ஆனவர்களைத் தங்களுடைய ஊருக்கு அழைத்து வந்து நிலை நிறுத்திக் கோயிலைக் கட்டிக் கொள்வார்கள். பிறகு அந்த நெடுந்தொலைவிலுள்ள மூலக் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள். இதன்படிதான், இந்து மதத்திலுள்ள எல்லாக் கடவுள்களும் மனிதர்களாக வாழ்ந்து கடவுள்களாக மாறியவர்களே.