1. தாத்தாக்கள் ஆத்தாக்கள் அருளால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எல்லா நலன்களும் வெற்றிகளும் உண்டாகட்டும்.
2. 23.10.81இல் உங்களோடு சேர்த்து மொத்தம் பதின்மூன்று சித்தரடியான்களுக்கு அருள்பட்டங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. அந்தத் தாக்கீது அருள்மிகு வீரமாகாளி சன்னிதானம் நெ.சேவுகன் அவர்களிடம் கொடுத்து அனுப்பப் பட்டுள்ளது. எனவே, தாயுமானவர் சன்னிதானம், நீங்களும் மற்ற நண்பர்களும் விரைவில் நேரில் சென்று அருள் பட்டங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதன்பிறகு அவரே நேரில் மதுரைக்கு வந்து ஒவ்வொரு அடியான் வீட்டிலும் பூசை செய்து பட்டம் கட்டி விடுவார். இது பற்றி உடனே தாயுமானவர் சன்னிதானத்தைச் சந்தித்து கலந்து பேசி முடிவெடுங்கள். முடிந்தால் ஏதேனும் ஓர் கோயிலில் அல்லது பொது இடத்தில் அல்லது யாராவது ஒருவர் வீட்டில் திருமண நிகழ்ச்சி போல் மாவிலை, தோரணங்கள் கட்டி இசைத் தட்டு அல்லது டேப் ரிகார்டர் அல்லது மேளக்காரர்களின் கச்சேரி வைத்து இசை பரப்பி யாகம் வளர்த்து நமது வீரமாகாளி சன்னிதானத்தை உங்களுக்கெல்லாம் ஒரே இடத்தில் அருள் பட்டங்கள் வழங்கச் சொல்லுங்கள். அனைவரிடமும் பணம் வசூல் செய்து ஒற்றுமையுடன் கூடி இந்த விழாவை வெற்றிகரமாக நடத்துங்கள். இந்த விழாவின் வெற்றி நமது குருதேவர் பங்கேற்கப் போகும் நிகழ்ச்சிகளுக்கும் மாநாட்டிற்கும் முன்மாதிரியாக அல்லது வெள்ளோட்டமாக இருக்கட்டும்.
3. நம் குருதேவர் அல்லது வெளியூரில் உள்ள அடியான்கள் யாருக்கு அஞ்சல் எழுதினாலும் அதனை எல்லோரும் படித்து மகிழ வேண்டும். உடனுக்குடன் நகல் எடுத்து சென்னை, திருச்சி, திருவையாறு, காரியேந்தல்பட்டி முதலிய இடங்களுக்கு அனுப்ப வேண்டும். அங்கு நம்மவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஓய்வு இல்லாததாலும் நகலெடுக்கின்ற அளவுக்கு கையெழுத்து நன்றாக இல்லாததாலும், நகல் எடுப்பதற்கு யாராவது ஒருவரை அனைவருக்கும் பொதுவாகச் சம்பளம் கொடுத்தாவது ஏற்பாடு செய்யுங்கள். விரைவில் நமக்கு வசதி வந்ததும் ஒரு ரோனியோ மெசின் அல்லது டைப்ரைட்டர் விலைக்கு வாங்கி குருதேவரே எல்லோருக்கும் நகல்கள் எடுத்து அனுப்பி விடுவார். கவலை வேண்டாம்.
4. நமது இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கொள்கைப்படி தொழிற்சாலைகள், வணிகம், விவசாயம், போக்குவரத்து முதலிய பெரும்பாலான அலுவல்கள் அனைத்தும் தொழிலாளர்களின் கூட்டுக் கழகங்களால்(Board, Committee, Union)தான் நடத்தப் படும். அது கூட்டுறவு முறையில் இயங்கும். இலஞ்ச ஊழல்களுக்கு இடமின்றி நிறைவேற வேண்டுமானால் தன்னலமற்ற தியாக உணர்வு நிறைந்த அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரம் மிகுந்த கொள்கைப் பற்றும் குறிக்கோள் உறுதியும் உடைய சில ஆயிரம் சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும் நாம் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு முன்பே தயாரிக்கப் பட்டுவிடல் வேண்டும். ஏனென்றால் அரசியல் வாழ்வில் ஆட்டு மந்தை போல் மக்கள் கூட்டம் எந்த நொடியிலும் நம்மோடு சேர்ந்து விடும். அதனால், ஆட்சியைப் பிடித்தாலும் ஏற்கனவே உள்ள ஊழல் பேர்வழிகள், தன்னல வெறியர்கள், சமுதாய விரோதிகள், பழமை வாதிகள், கோழைகள், அடிமைப்புத்தி படைத்தவர்கள், எதிர்ப் புரட்சி வாதிகள் ..... நம்முடைய புதுமைத் திட்டங்களையும், புரட்சி நோக்கங்களையும், சமத்துவ சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டாட்சிக் கொள்கையையும் சிறுகச் சிறுகச் சிதைத்து நலிவடைய வைத்துச் செயலற்றுப் போகச் செய்து முடிவில் புதைகுழிக்கு அனுப்பிக் கல்லறையும் கட்டி விடுவார்கள். எனவே, இன்றைக்கு நாட்டிலுள்ள கல்வித் துறையினரையும், கலைத் துறையினரையும், அதிகாரிகளையும், அலுவலகப் பாட்டாளிகளையும் உடனடியாக நம்முடைய அடியான்களின் நேரடிக் கண்காணிப்பு வழிநடத்துதலுக்கு உள்ளாக்கினால்தான் அறிவுத் துறையினரால் உடலுழைப்புப் பாட்டாளி வர்க்கம் பிரித்தாளப் படுவதும், சுரண்டப் படுவதும், ஏமாற்றப் படுவதும் நிறுத்தப்பட முடியும். இதற்கு அதிகம் கல்வியறிவு இல்லாத விவசாயிகள், கூலிகள், குட்டி வணிகர்கள், அலுவலகக் கடைநிலை ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள், அன்றாடக் கூலிகளாய் வாழும் பாமரப் பாட்டாளிகள் முதலியவர்கள் கடவுள் அருளால், இந்துமதத் தத்துவத்தால், சித்தர் நெறியால் சித்தர் நெறிச் செல்வர்களாய் .... குமரி முதல் இமயம் வரை ஒன்று திரட்டப் பட்டாக வேண்டும். ஏனெனில் நமது கொள்கைகளும், குறிக்கோளும் இந்துமதம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் இந்தியத் துணைக் கண்ட மக்கள் அனைவர்க்கும் நலமளிக்க வேண்டும், வளமளிக்க வேண்டும், வாழ்வளிக்க வேண்டும்.
5. நண்ப! ஆரியர்கள் கி.மு.2000இல் இந்தியாவுக்குள் நுழைந்து ஓராயிரமாண்டுகள் ஆகியும் கூட இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தமிழ் மொழிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்தத் தமிழ் மொழியோடு பல்லாயிரமாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து பிறந்து வளர்ந்து தனித் தன்மை பெற்றுவிட்ட சில உலக மொழிகள் மீண்டும் வந்து கலப்பு செய்தன. அதனால்தான், இந்தியா முழுதும் பல புதிய கூட்டு மொழிகள் பிறந்தன. அவற்றினடிப்படையில் பல மொழி வழி இனங்கள் (different races formed on linguistical basis) தோன்றின. இப்படித்தான் இந்தியாவின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் பல மொழிகளைப் பேசும் பல இனத்தவர்களாகக் காலப் போக்கில் பிரிந்தார்கள். எனவே, இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளும் தமிழ் மொழியின் குழந்தைகளே என்பதையும், இந்தியாவில் உள்ள எல்லா இனத்தவர்களும் தமிழர்களே என்பதையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டே நமது குருதேவர் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற கருத்தை விளக்கும் வண்ணம் நமது இந்து மறுமலர்ச்சி இயக்கத்தை இந்திய மக்கள் அனைவர்க்கும் உரியதாக வளர்த்து வருகிறார். அதாவது, காலப் போக்கில் தமிழர்கள் பல மொழிகளுக்கு உரியவர்களாகிப் பல இனத்தவர்களாகப் பிரிந்திட்ட போதிலும்; அவர்கள் தங்களுடைய முன்னோர்கள் கடைப்பிடித்த சித்தர் நெறி எனும் இந்து மதத்தையே அகப் பண்பாடாகவும் (culture), புற நாகரீகமாகவும் (Style, Fashion, Civilization) இன்று வரை கையாண்டு வருகிறார்கள். எனவேதான் மீண்டும் இந்தியாவிலுள்ள அனைவரையும் ஒரே குடும்பமாக ஒன்று திரட்டி, ஒற்றுமைப்படுத்தி சமுதாய விழிச்சியும், அரசியல் செழுச்சியும் பெற்றிடுமாறு செய்வதற்கு இந்து மதத்தையே சாதனமாக அல்லது கருவியாக கையாளப் புறப்பட்டிருக்கிறார் நமது குருதேவர். இதைத்தான் மதத்தில் புரட்சியல்ல நடக்கப் போவது; “மதவழிப் புரட்சியே” (In India Revolution in Religion is not necessary; only revolution through religion is necessary). இதனை முதலில் நம்மவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்தியா முழுவதையும் இப் பேருண்மையினைப் புரியும்படிச் செய்ய முடியும்.
6. நண்ப! நமது குருதேவர் தனது அநுபவங்களை ஒன்று திரட்டி இன்றைய மக்களின் எல்லா நிலைகளையும் உணர்ந்து அதற்கேற்பவே தமது செயல் திட்டங்களை வகுத்துள்ளார். நாம் யாவரும் போராட்டமோ, பெரிய பெரிய ஊர்வலங்களோ செய்யத் தேவையில்லை. நம்மில் யாரும் சிறைக்குக் கூடச் செல்லத் தேவையில்லை. எக்காரணத்தை முன்னிட்டும் நம்மில் யாரும் வன்முறைச் செயலில் ஈடுபடப் போவதில்லை. பெருவீரமோ தியாகமோ நமது மறுமலர்ச்சி இயக்கத்துக்குத் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் துணிவும், பணிவும், பொதுநல நாட்டமும், கட்டுப்பாட்டுடன் பிறரோடு ஒருங்கிணைந்து ஒற்றுமையாகச் செயல்படும் பண்பாடுமுடைய சித்தரடியான்களையே பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும், பெருநகரங்களில் தெருக்கள் அல்லது வட்டாரங்கள் தோறும் உருவாக்க வேண்டுமென்பதுதான். இதனை விரைந்து செயல்படுத்துவதற்காக தனிமனிதர்கள் இல்லங்கள் தோறும் வாசலில் ஞானக் கொடிகள் ஏற்ற வேண்டும். முடிந்தால் கோயில்களிலும், பொதுவிடங்களிலும் ஞானக் கொடிகளை ஏற்ற வேண்டும். இதற்கு மேல் ஆங்காங்கே அருளாளர்கள், நாயன்மார்கள், அடியார்கள், ஆழ்வார்கள், புகழ்பெற்ற தமிழிலக்கியங்கள், சிறந்த தமிழ்ப் புலவர்கள், சமய சமுதாய அரசியல் பெரியவர்கள் முதலியவர்களின் பெயரால் சங்கம், மன்றம், கழகம், திருக்கூட்டம், வழிபாட்டுக் கூட்டம், பொதுப்பணி மன்றம்.... என்ற பெயர்களில் பல அமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும். இவையே இன்றைக்கு உடனடியாகத் தேவைப் படுகின்ற நமது குருதேவரின் செயல்திட்டம். இதனைத் தலைவர், செயலர், பொருளாளர் என்ற மூவரை ஒவ்வொர் அமைப்பிலும் உண்டாக்கிக் கட்டுப்பாடும் நிறுவன நிர்வாக ஒழுங்கமைப்பும் உடைய ஒரு வலுவான சிறு கூட்டத்தை உருவாக்கி விட்டால் போதும். அதாவது நமது இயக்கச் செயல்வீரர்களாகச் சில ஆயிரம் பேர் சேர்த்து விட்டால் போதும். அவர்களை நமது குருதேவர் ஏட்டறிவும், பட்டறிவும் நேரடிப் பயிற்சியால் வழங்கி உண்மையான தலைவர்களாக உருவாக்கிடுவார். அப்படி நன்கு உருவாக்கப் பட்டவர்கள் ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, அலுவலகம் அலுவலகமாக, தொழிற்சாலை தொழிற்சாலையாகச் சென்றிடுவார்கள், செயல்படுவார்கள். அதனால் உண்மையான சமய சமுதாய அரசியல் பொருளாதாரப் புரட்சிகளை அமைதி வழியில் “அண்ணல் மகாத்மா காந்தியின் அன்பு வழியில்” செயலாக்கக் கூடிய தொண்டர்கள் உருவாக்கப் படுவார்கள். இந்திய தேசத் தந்தை மகான் மகாத்மா காந்தி பசனைப் பாடல் பாடித்தான் விடுதலைப் போரில் வெற்றி பெற்றார் என்பதை மறுப்பவர் தோன்றும் வரை நாம் மதத்தின் வழியாகப் புரட்சியை முடித்து விடுவது எளிது. அதன்பின் தொழில் புரட்சி, பண்பாட்டுப் புரட்சி, ஆட்சி இயந்திர மாற்றப் புரட்சி.... முதலிய அனைத்தையும் மின்னல் வேகத்தில் செய்து முடித்திடலாம். அனைத்தையும் முழுமையாக வெற்றியாக்கிடத் தாத்தாக்கள் ஆத்தாக்கள் இருக்கிறார்கள். திருவுள ஒப்புதலும், குருவுளச் சம்மதமும் இறைவர்கள், கடவுள்கள், தெய்வங்கள், தேவியர்கள், தேவர்கள், தேவதைகள், வானவர்கள், அமரர்கள், இருடிகள், முனிகள், முனீசுவரர்கள், கணங்கள் ..... முதலிய அனைவரின் முழுமையான ஒத்துழைப்போடும் செயல்படும் நமது குருதேவர் ஞாலகுரு, குருமகா சன்னிதானம், சித்தர் கருவூறார் இருக்கிறார். நாம் வெல்வோம்! வெற்றி நமதே! உடன் நகல். நகலைக் குருதேவருக்கும் அனைவருக்கும் அனுப்புக.
“.... மானுடர்களில் தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள் பிறப்பெடுத்துத் தொண்டாற்றுவது பதினெண் சித்தர்களின் அருட்பணித் திட்டமே. பதினெண் சித்தர்களின் நேரடி விந்து வழி வாரிசுகளால்தான் ‘அறிவுரை’, ‘அருளுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரை’ வழங்க முடியும்! முடியும்!! முடியும்!!! இவற்றின் பயனாகத்தான் இந்திய மண்ணில் அருளாளர்கள் வாழையடி வாழையாகத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ....
"... மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான “சித்தர் நெறி” உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. “பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் ≡ அன்னியர் = வெளிநாட்டவர் - “தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ..."
"... இந்தியாவின் எண்பது கோடி மக்களுக்கும் இந்துமத வழியாகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய அமைப்புத் திட்டத்தைச் செயலளவில் அறிமுகம் செய்யும் வரையிலாவது யாம் வானம்பாடியாக வாழ்ந்தே தீர வேண்டும். இறுதி வரையில் கூட இலைமறை காயாக வாழ்ந்தால்தான் இந்நாட்டில் பல தலைமுறைகளாக இருந்து வரும் கோழை நிலைகளையும், ஏழை நிலைகளையும், மோழை நிலைகளையும் முழுமையாக அகற்ற முடியுமென்றால், அப்படியே வாழத் தயாராகவும் இருக்கிறோம், ..."