“சித்தர் நெறி, இம்மண்ணுலகுக்கும் முன்பே பிறந்தது. சித்தர்கள் தோன்றித் தோன்றி மறைவார்கள், நிறைவார்கள். அப்போதைக்கப்போது பித்தர்கள், எத்தர்கள் சித்தர் நெறியைச் சிதைக்க முயல்வர். அது அறுவடைக்குப் பின் உழுது விதைப்பது போல் அடுத்தடுத்துத் தோன்றும் சித்தர்களைச் செயல்படச் செய்யும்”
- குருபாரம்பரிய வாசகம்.
இதன்படியே, யாம் மிகவும் துணிவோடு வெளிப்பட்டுச் செயல்படப் புறப்பட்டு விட்டோம். எனவே, “சித்தர் வரும் தருணமிது” என்ற “அருளாளர்களின் அறிவிப்பு” மெய்யாகச் “சித்தர் செயல்படும் காலமிது” என்று அடியான்களும், அடியாள்களும், அடியார்களும் அறிவிப்புச் செய்யும் நற்காலம் வந்துவிட்டது.
“அருளுலக இருள்களையும், அவலங்களையும், மாயங்களையும், கற்பனைகளையும், தவறுகளையும், மடமைகளையும், சுரண்டல்களையும், முதலாளித்துவத்தையும், எதேச்சாதிகாரங்களையும், சர்வாதிகாரங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும், வேறுபாடுகளையும், கடுமைகளையும், கொடுமைகளையும்.... முழுமையாக அகற்றும் மாவீரர் படை தயாராகி அருட்போர் ஆரம்பமாகி விட்டது. இதன் வெற்றிக்குப் பின், இம்மாபெரும் படை, பொருளுலகக் குறைகள், ஏக்கங்கள், தேக்கங்கள், முடக்கங்கள், அடக்கு முறைகள், கேவலங்கள், இல்லாமைகள், இயலாமைகள், பற்றாக் குறைகள், ஊழல்கள், உறிஞ்சல்கள், சூழ்ச்சிகள், சூறைகள், கள்ளச் சந்தைகள்... முதலிய அனைத்தையும் அகற்றிச் சித்தர்களின் ‘சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைத்திடும். அதற்காக மிக நெடிய போர் அறவழியில் நிகழும். ஆனால், சமுதாயத்தின் அடித்தளத்தி லிருக்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து ஊழிப் பெருவெள்ளம் போல்.... செயல்பட நேரிட்டாலும் நேரிடலாம். அதனைக் கடவுளின் கட்டளையாகக் கருதவே நேரிடும்..... எனவே கவலையில்லாமல் ‘அருளாட்சிக்கு அழைப்பு’ என்ற அறிக்கையை இன்னும் சற்றுப் பெரியதாக; நமது இயக்கக் கொடியுடனும், பல அருளாளர்களின் முகவரியுடனும் அச்சிடுங்கள்.”
இனிய நண்பரே! தங்களின் காணிக்கைச் சேமிப்பும்; அலுவலகச் சிக்கல் பற்றிய அஞ்சலும் பெற்றோம். ஆவன செய்துள்ளோம்.
தாங்கள், மதுரையில் நமது புத்தகங்களையும், அறிவிப்புக்களையும் அச்சிடும் கனவாய் பிரிண்ட்டர்ஸ், [45, தலைவிரிச்சான் சந்து, மேலமாசி வீதி, மதுரை - 1] சென்று ‘அருளாட்சிக்கு அழைப்பு’ என்ற அறிக்கையை மட்டும் குறைந்தது 2000 நகல்கள் நமது கொடியுடன் உங்களின் முகவரியுடன் பெரிய அளவில் அச்சிடுங்கள். வீரமாகாளி சன்னிதானத்தில் அவற்றைப் பூசையில் வைத்து 1008ஐ மட்டும் உங்கள் வட்டாரத்தில் வழங்குங்கள். 108 ஒவ்வொரு மையத்துக்கும் அனுப்புங்கள். எமக்கும் மீதியை அனுப்புங்கள் -- உங்களுடைய பளு, சுமை, சிக்கல் நீரில் வெல்லம் கரைவது போல் கரைந்திடும். கவலைப்பட வேண்டாம்.
தங்களுக்குப் பலரின் வாழ்த்துதலும் அருளும் கிடைத்திடும். காரைக்குடி வட்டாரத்தில் பலர் எமக்கு அஞ்சல் எழுதியுள்ளார்கள். அனைவரையும் உங்களிடம் தொடர்பு கொள்ளச் சொல்லியுள்ளோம். களிப்போடும் விழிப்போடும் செயல்படுங்கள். செழிப்பு விளைந்திடும்.
“.... மானுடர்களில் தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள் பிறப்பெடுத்துத் தொண்டாற்றுவது பதினெண் சித்தர்களின் அருட்பணித் திட்டமே. பதினெண் சித்தர்களின் நேரடி விந்து வழி வாரிசுகளால்தான் ‘அறிவுரை’, ‘அருளுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரை’ வழங்க முடியும்! முடியும்!! முடியும்!!! இவற்றின் பயனாகத்தான் இந்திய மண்ணில் அருளாளர்கள் வாழையடி வாழையாகத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ....
"... மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான “சித்தர் நெறி” உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. “பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் ≡ அன்னியர் = வெளிநாட்டவர் - “தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ..."
"... இந்தியாவின் எண்பது கோடி மக்களுக்கும் இந்துமத வழியாகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய அமைப்புத் திட்டத்தைச் செயலளவில் அறிமுகம் செய்யும் வரையிலாவது யாம் வானம்பாடியாக வாழ்ந்தே தீர வேண்டும். இறுதி வரையில் கூட இலைமறை காயாக வாழ்ந்தால்தான் இந்நாட்டில் பல தலைமுறைகளாக இருந்து வரும் கோழை நிலைகளையும், ஏழை நிலைகளையும், மோழை நிலைகளையும் முழுமையாக அகற்ற முடியுமென்றால், அப்படியே வாழத் தயாராகவும் இருக்கிறோம், ..."