1. ஒரு நாட்டின் கடவுளையோ, ஒரு மொழிக்குரிய கடவுளையோ, ஓரினத்தின் கடவுளையோ, மற்ற நாட்டினரோ, மற்ற மொழியினரோ, மற்ற இனத்தினரோ வழிபட்டுப் பயனே இருக்காது. ஏனென்றால் ஏறத்தாழத் தமிழ்மொழியின் ஒலியலைகளைக் கொண்டு உலக மொழிகள் அனைத்தையும் பேச முடியும் என்பது போல், வேறெந்த மொழியையும் கொண்டு தமிழ் மொழியைப் பேச முடியாது. எல்லா மொழிகளுக்குமே மனிதர்களை அருளுலகில் உள்ள நாற்பத்தெட்டு வகையான சித்தி நிலைகளைப் படிப்படியாகப் பெற்றுக் காலப் போக்கில் கடவுளாக ஆக்கிடும் வல்லமை உண்டு. ஆனால் அந்த வல்லமையின் அளவு தமிழ் மொழியினால் கிடைக்கும் அளவிற்கு இருக்காது. இருந்தாலும் உலகெங்குமுள்ள எல்லா மொழியினர்களுமே அந்தந்த மொழிகளுக்குரிய கடவுளர்களாக ஆகியிருக்கிறார்கள். எனவேதான் அவரவர் தத்தம் மொழியில் தொன்று தொட்டு வழிபட்டு வந்த கடவுள்களையே வழிபட்டு வந்தால்தான் பயனடைய முடியும் என்று தெளிவாகப் பதினெண் சித்தர்களுடைய இந்து மதம் கூறுகிறது.
2. மனிதர்கள் பொதுவாகக் கடவுளை அவரவர் மொழியில் அழைத்துப் பூசை செய்தாலும் அந்தந்த மொழிக்குரிய கடவுள்கள்தான் அவரவர்க்கு உதவி செய்வார்கள். அதுதான் கடவுளர் உலகில் உள்ள மிகப் பெரிய நுட்பமான பயனுள்ள பேருண்மையாகும், தத்துவமாகும். அதனை அநுபவப் பூர்வமாக ஞானாச்சாரியார் என்ற நிலையில் உள்ளவர்கள்தான் தங்கள் தங்கள் காலங்களில் மிகத் தெளிவாக வெளியிடுகிறார்கள். இந்தப் பேருண்மை உலகம் முழுதும் தெரியுமென்றால் இப்பொழுது தமிழ் நாட்டில் நடை பெறுகின்ற புத்த மதம், சமண மதம், பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரின் வேத மதம், பதினெண் சித்தர்களுடைய இந்துமதம்..... இவைகளுக்கிடையில் கடுமையான போட்டா போட்டியோ, போரோ உருவாகாது. அதாவது யாரும் எந்த மதத்தையும் அழிக்க விரும்ப மாட்டார்கள். வற்புறுத்திப் பரப்பிடவும் விரும்பிட மாட்டார்கள். அதே நேரத்தில் உலகெங்கும் தோன்றிடும் கடவுள்கள், தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள், சித்தியாளர்கள், தவசிகள், ஞானிகள்.... முதலியவர்கள் மனித வாழ்விற்குத் தேவையென கண்டறிந்த பேருண்மைகள் உலகெங்கும் அன்பு முறையில், அமைதி வழியில் எடுத்துக் கூறிப் பரப்பப் படும். அது உலகின் மனித இனங்களின் விடுதலை, மொழிகளின் விடுதலை, நாடுகளின் விடுதலை, உலக அமைதி, நட்பு, சமாதானம், குடும்பப் பாசம், தோழமை முதலிய அனைத்தையும் வளர்த்திடும் என்பதுதான் பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் தத்துவம்.
(i) அருளுலகத்தைப் பொறுத்தவரை ‘ஒரே கடவுள்’ என்று சொல்வது மனிதனுடைய தவறான கற்பனை. இது மனிதனுடைய வியக்கத் தக்க வினோதமான ஆசை, அதிசயிக்கத் தக்க விருப்பம்.
(ii) கடவுள் என்பவருக்கு எல்லா மொழிகளும் தெரியும் என்று நினைப்பதும், நம்புவதும் மிகப் பெரிய தவறு. எந்த மொழியைச் சேர்ந்த மனிதன் கடவுளாகிறானோ அவனுக்கு அந்த மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. அவன் கடவுளாகவே இருந்தாலும் இதுதான் உண்மை.
(iii) மனிதர்கள் விளையாட்டுப் பருவத்திலுள்ள சிறுவர்கள் போலக் கற்பனையாகக் ‘கடவுளால் எல்லாம் செய்ய முடியும், கடவுளுக்கு எல்லாம் தெரியும்’ என்று கருதுவது மாபெரும் தவறு.
(iv) அண்டபேரண்டங்களிலிருந்து வந்திருக்கக் கூடிய வழிபடு நிலையினர்கள், அல்லது சித்தர்கள் கடவுளாக வணங்கப் பட்டாலும் சரி, அவரவருடைய ஏட்டறிவுக்கும், பட்டறிவுக்கும் ஏற்பத்தான் அவர்களுக்குச் செய்திகள் தெரிந்திருக்கும்; அவர்களால் எதையும் செய்ய முடியும். அதாவது மனிதர்களிடையே அறிவிலும், ஆற்றலிலும், மற்றச் செயல்பாடுகளிலும் எப்படி வேறுபாடுகள் நிறைய இருக்கின்றனவோ அது போலத்தான் கடவுள்களுக்கு இடையிலும் அறிவிலும், ஆற்றலிலும், செயல் திறமைகளிலும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர்.
இந்தப் பேருண்மைகளின் அடிப்படையில்தான், பதினெண் சித்தர்கள் சித்தர் நெறியெனும் சீவநெறியான இந்து மதத்தைப் படைத்திருக்கிறார்கள். அதாவது எந்தத் தனிமனிதனாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு குழுவினராக இருந்தாலும் சரி, அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அவர்கள் தாங்கள் விரும்பும் கடவுளர்களின் கோயில்களுக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் அவர்கள் தங்கள் தங்களுக்குரிய இல்லறத் தெய்வம், குடும்ப தெய்வம், உறவினர்கள் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், தெருவினர் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், ஊரார் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் தெய்வம், குறிப்பிட்ட வட்டாரம் அல்லது நாடு முழுதும் சேர்ந்து கொண்டாடும் தெய்வம் என்று தெய்வங்களைப் பலவகை நிலைக்குரியவர்களாக வகுத்துப் பிரித்தமைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல மனிதர்கள் தங்கள் தங்களின் தாய்மொழியின் அடிப்படையில்தான் தங்களுடைய வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் தாங்கள் வழிபடக் கூடிய கடவுள்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், நாட்டின் எல்லைக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, சொந்த இடம் விட்டு நெடுந்தொலைவு சென்று வீர மரணத்தாலோ, மிகச் சிறந்த பத்தி, சத்தி, சித்தி, முத்திகளாலே கடவுளாக மாறியவர்கள் இருப்பார்களானால் அவரைச் சேர்ந்தவர்கள் நெடுந்தொலைவுள்ள இடத்திற்குச் சென்று பூசை செய்து அங்கிருந்து பிடிமண் எடுப்பார்கள். அதாவது, மூன்று கைப்பிடி மண் எடுத்து ஒரு துணியில் கட்டிப் புதிய ஓலைப் பெட்டியில் வைத்திருப்பார்கள். முறைப்படிப் புனிதக் கலயம்* தயாரித்து [*கலயம் = வழக்காற்றில் இதனைக் கலசம், கலயம் அல்லது கரகம் அல்லது கிரகம் தயாரித்தல் என்று சொல்லுவார்கள்] இரண்டையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து ஊர் வரை வாசனைப் பூவை வழி நெடுகப் போட்டுக் கொண்டு கடவுள் ஆனவர்களைத் தங்களுடைய ஊருக்கு அழைத்து வந்து நிலை நிறுத்திக் கோயிலைக் கட்டிக் கொள்வார்கள். பிறகு அந்த நெடுந்தொலைவிலுள்ள மூலக் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள். இதன்படிதான், இந்து மதத்திலுள்ள எல்லாக் கடவுள்களும் மனிதர்களாக வாழ்ந்து கடவுள்களாக மாறியவர்களே.
பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இம் மண்ணுலகுக்கு வழங்கிய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தில், 'ஞானாச்சாரியார்' எனப்படுபவர்கள் பதினெண்சித்தர் பீடாதிபதிகளே. இந்த ஞானாச்சாரியார்களே இம்மண்ணுலகின் 'ஞானம்', 'அகஞானம்', 'புறஞானம்', 'விஞ்ஞானம்', 'மெய்ஞ்ஞானம்' எனும் ஐந்தினையும் மனிதரின் ஐம்புலன்களின் மருந்தாகவும், விருந்தாகவும் வழங்கியவர்கள்..... [மேலும் படிக்க...]
"... தமிழ் மொழி, இனம், நாட்டைக் காப்பதற்குத்தான் 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் கருவறைக் கோபுரமுடைய கோயிலை தஞ்சையில் கட்டினார். மிகவும் கடினமான இம்மாபெரும் செயலைச் செய்தது மட்டுமல்லாமல், கருவறைக் கோபுரத்தை உடைய கோயிலை எப்படி கட்டுவது என்ற இரகசியத்தையும், பதினெட்டு வகை அருட்கலைகளையும், ஐந்திறப் பூசை முறைகளையும், அருளுலக வாழ்வுக்குரிய சாத்தர, சாத்திற, சாத்திர, தோத்தர, தோத்திர, தோத்திறங்கள் எனப்படும் பதினெட்டு வகையான அருளுலக இலக்கியங்களையும், மற்றவற்றையும் மனந்திறந்து பலருக்கும் கற்றுக் கொடுத்தார். ..... [மேலும் படிக்க...]
"மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,... இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். ....."