நான்கு யுகங்களாக ஞானாச்சாரியார்கள் தோன்றி வருகிறார்கள். இவர்கள் இன்று 1989உடன் 43,73,090 ஆண்டுகள் எனும் மிகப் பெரிய இடைவெளி யில் (12) பன்னிரண்டு ஞானாச்சாரியார்கள்தான் தோன்றியிருக்கிறார்கள். இவர்கள் மிகப் பெரிய நெடிய இடைவெளிகளில்தான் தோன்றியிருக்கிறார்கள். இருப்பினும், இவர்கள் பதினெண் சித்தர்களுடைய அண்ட பேரண்டமாளும் மெய்யான இந்துமதம் ஒன்றையே தத்துவ அடிப்படையிலும், செயல் சித்தாந்த அடிப்படையிலும் அருளூறு பூசா மொழிகள், பூசாவிதிகள் முதலியவற்றின் அடிப்படையிலுமே தங்கள் தங்கள் காலத்தின் தேவைக்கேற்ப விளக்குகிறார்கள்.
மேலும், ஒவ்வொரு ஞானாச்சாரியாரும் தமக்கு முன்னர் வாழ்ந்த ஞானாச்சாரியார்களின் போதனைகளையும், சாதனைகளையும் முழுமையாகத் தெரிந்தும், ஆராய்ந்தறிந்து புரிந்துமே, தங்களின் போதனைகளையும், சாதனைகளையும் முன்னோரின் அடியொற்றியே வழங்கிடுகின்றார்கள். எனவேதான், இந்துமதத்தில் மாற்று மதங்களுடன் வேற்றுமை கொள்ளும் உணர்வோ, எண்ணமோ, போக்கோ, நோக்கமோ எள்முனையளவு கூட இல்லை.
மேலும், பதினெண் சித்தர்களின் ‘சித்தர்நெறி’ எனும் ‘சீவநெறி’யான ‘மெய்யான இந்துமதம்’தான் இம்மண்ணுலகின் முதல் மதம், மூல மதம், மூத்த தொன்மை மதம், தாயான மதம்.... என்பதால், இதில் மத மாற்றம், மத வளர்ச்சிக்குரிய கட்டுப்பாடான செயல்திட்டம், மாற்று மதங்களுடன் போர், வேற்று மதக் கண்டனங்கள், போராட்டங்கள்... என்பனவற்றிற்கே இடமில்லை. ஞானாச்சாரியார்கள் காலப் போக்கில் பல மதங்கள் தோன்றிடத் தோன்றிடத் தோன்றினார்கள் என்றாலும் எந்த ஞானாச்சாரியாரும் மத வேறுபாடுகளையோ, மதப் போராட்டங்களையோ, போர்களையோ உருவாக்க வில்லை.
ஆனால், ‘மதம் என்ற ஒரு துறை பதினெண் சித்தர்களின் இந்துமதம் எனும் ஆலமரத்தின் இலைகளாகத்தான் வளர்ந்துள்ளது’ என்ற ‘மத ஒருமைப்பாட்டுக் கருத்தை’யே வலியுறுத்திக் கூறுகின்றனர்.
ஞானாச்சாரியார்கள்தான் ‘உலக மொழிகள் அனைத்திலுமே அப்படியே ஒலி நயமும், பொருள் நலமும் கெடாமல் மொழியாக்கம் (மொழித் திருத்தம், மொழிபெயர்ப்பு) உருவாக்கிப் பூசைகளில் பயன்படுத்திக் கொள்வதற்கென்று ‘காயந்திரி’ என்ற பெயரில் [காயம் = உடல் --> இந்த உடலை அருளுலகுக்கு ஏற்ப பயன்படுத்திப் பக்குவப் படுத்துதற்கு உரியது, திரி = திரித்தல், பக்குவப் படுத்தல்] உடலின் ஐம்புலன்களும் பத்தியால், சத்தி, சித்தி, முத்திகளைப் பெற வழிவகை செய்தார்கள். இதுவே, ஞானாச்சாரியார்களுடைய அருட்கொடையை, அருளுலகச் செல்வங்களை வாரி வாரி வழங்கும் வள்ளல் பண்பை விளக்கும் மிகப் பெரிய சான்றாகும்.
எனவேதான், ஞானாச்சாரியார்களின் பூசா மொழிகளும், பூசா விதிகளுமே, உலகின் மறைகளுக்கும், முறைகளுக்கும், நெறிகளுக்கும், வேதங்களுக்கும், சித்தங்களுக்கும், நாதங்களுக்கும், போதங்களுக்கும், ஓதங்களுக்கும்* [*ஓதல்களுக்கும் - ஏடுகளின் பாட வேறுபாடு] அடிப்படையாக, உள்ளீடாக, உயிரோட்டமாக, முடிவான தத்துவமாக இருக்கின்றன.
குறிப்பாக, பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரின் வேத மதத்திற்குப் பதினெண் சித்தர்களின் காயந்திரி மந்தரங்கள், மந்திரங்கள், மந்திறங்கள், மாந்தரங்கள், மாந்தரீகங்கள் எனும் ஐந்து வகைப் பூசா மொழிகள்தான் மிகச் சிறந்த உயிரோட்டங்களை வழங்கின. ஆனால், அவர்களின் மொழியாக்கத்தில் அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அமுதத் தெய்வீகத் தமிழ் மொழியின் ஒலிநயங்களும் கருத்து நலங்களும் பெருமளவில் இடம் பெற முடியாமல் போய்விட்டது. அதனால்தான், அவர்கள் பதினெண்சித்தர்களின் இந்து மதத்தோடு தங்களுடைய வேதமதத்தைக் கலந்து புதிதாக உருவாக்கிய ஹிந்து மதம் அருளாற்றலை உடையதாகிடாமல் போய்விட்டது.
[எனவேதான், பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியான குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள், கலியுகத்தில் பொய்யான ஹிந்துமதம் பதினெண்சித்தர்களின் அருட்பணி விரிவாக்கத் திட்டங்களைச் செயலிழக்கச் செய்துவிட்டன என்று வருந்தினார். அதற்காகவே, அவர் மெய்யான இந்துமதமும் பொய்யான ஹிந்துமதமும் என்று தலைப்பிட்டுப் பல நூல்களும், எண்ணற்ற கட்டுரைகளும் எழுதினார்.]
ஞானாச்சாரியார்கள், உலக மக்களுக்கு அருட்செல்வங்களை அநுபவப் பொருளாக வாரிவாரி வழங்கிடும் அருட்கொடை வள்ளல்களாகத்தான் வாழ்ந்திடுகின்றார்கள். எனவேதான், அண்ட பேரண்டமாளும் பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் காயந்திரி மந்தர, மந்திர, மந்திற, மாந்தர, மாந்தரீகங்கள் கணக்கற்று இருந்த போதிலும், அவற்றில் இரண்டை மட்டும் எல்லா மானுடரும் தங்களின் மொழியின் ஒலிநயத்துக்கும், பொருட்சிறப்புக்கும் ஏற்ப மொழியாக்கம் செய்து அன்றாடம் ஓதும்படி அருளாணை வழங்கியுள்ளார்கள்.
ஞானாச்சாரியார்கள் இவையிரண்டையும் எல்லா நூல்களின் ஆரம்பத்திலும் குறிப்பிடுகின்றார்கள். இதே சமயத்தில் அருளுலக நூல்களில் எல்லாம் ‘அருட் சினை மந்திறம்’, ‘கற்பூரச் சோதி வழிபாட்டு மந்தரம்’ என்ற இரண்டையும் ஆரம்பத்திலேயே கூறுகிறார்கள். இவை மட்டுமன்றி முருகன், பிள்ளையார், கணபதி, வினாயகர், காளி, மாரி, சூரியன், திங்கள், வியாழன், சிவன், திருமால் முதலியோருக்கெல்லாம் உரிய காயந்திரிகளை அந்தந்த கடவுளர்க்குரிய நூல்களில் குறிக்கிறார்கள். இந்தப் பூசாமொழிகள், இவை சார்ந்த பூசாவிதிகள்.... முதலிய நூல்கள் எல்லாம் அச்சேறி வெளிவர வேண்டும். அதுவே ஞானாச்சாரியார்களைப் போற்றுதலும் வழிபடலுமாகும்.
பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இம் மண்ணுலகுக்கு வழங்கிய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தில், 'ஞானாச்சாரியார்' எனப்படுபவர்கள் பதினெண்சித்தர் பீடாதிபதிகளே. இந்த ஞானாச்சாரியார்களே இம்மண்ணுலகின் 'ஞானம்', 'அகஞானம்', 'புறஞானம்', 'விஞ்ஞானம்', 'மெய்ஞ்ஞானம்' எனும் ஐந்தினையும் மனிதரின் ஐம்புலன்களின் மருந்தாகவும், விருந்தாகவும் வழங்கியவர்கள்..... [மேலும் படிக்க...]
"... தமிழ் மொழி, இனம், நாட்டைக் காப்பதற்குத்தான் 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் கருவறைக் கோபுரமுடைய கோயிலை தஞ்சையில் கட்டினார். மிகவும் கடினமான இம்மாபெரும் செயலைச் செய்தது மட்டுமல்லாமல், கருவறைக் கோபுரத்தை உடைய கோயிலை எப்படி கட்டுவது என்ற இரகசியத்தையும், பதினெட்டு வகை அருட்கலைகளையும், ஐந்திறப் பூசை முறைகளையும், அருளுலக வாழ்வுக்குரிய சாத்தர, சாத்திற, சாத்திர, தோத்தர, தோத்திர, தோத்திறங்கள் எனப்படும் பதினெட்டு வகையான அருளுலக இலக்கியங்களையும், மற்றவற்றையும் மனந்திறந்து பலருக்கும் கற்றுக் கொடுத்தார். ..... [மேலும் படிக்க...]
"மூன்று உகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கல், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,... இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். ....."